வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (17/11/2017)

கடைசி தொடர்பு:15:34 (17/11/2017)

“அதுவும் என் புள்ள தானே, வயித்துல முட்டுனதும், உதச்சதும் மறந்துருமா? ” - வாடகைத் தாய்களின் உயிர்வலி #VikatanExclusive

தாய்மை என்ற சொல்லைப் புனிதப்படுத்தத் தேவையில்லை என்றாலும், இனப்பெருக்கம் என்பது எல்லா உயிர்களுக்குமே மிகவும் முக்கியமானதொரு நிகழ்வு. அதுவும் குறிப்பாக மனித இனத்தின் பரிமாண வளர்ச்சிக்கு. ஆனால், மாறி வரும் சமூகச் சூழல், உணவு முறை மாற்றம், உடல் உழைப்பு மாற்றம், உடலில் பல்வேறு நோய்களையும் குறைபாடுகளையும் கொண்டுவந்திருக்கிறது. அது இனப்பெருக்கத்தையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. எனவேதான், இன்றைக்குத் தெருவுக்கு ஒரு ஃபெர்ட்டிலிட்டி சென்டர்களையும் உருவாக்கியிருக்கிறது.

மருத்துவ முன்னேற்றங்களால், எவ்வளவோ பெண்கள் தாய்மை அடைந்திருந்தாலும், சிலருடைய கர்ப்பப்பைக்கு குழந்தையைச் சுமக்க வலிமை சுத்தமாக இருப்பதில்லை. இதற்கு மருத்துவத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் வாடகைத்தாய். அதாவது விந்தணுவை வேறொரு பெண்ணுடைய கர்ப்பப்பையில் செலுத்தி, அந்தப் பெண்ணுடைய உடலில் கருவை வளரச்செய்தல். இன்றைக்கு அனைத்தும் வணிகமாகிவிட்ட சூழலில், பணம் படைத்தவர்களுடைய சொத்துக்கான வாரிசை, ஏழ்மையின் காரணமாக வயிற்றில் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பெண்கள். சென்னையில் மட்டும் ஏழ்மையில் இருக்கும் பெண்களை மூளைச் சலவை செய்து வாடகைத்தாய் முறைக்குள் தள்ளுவதற்கென்று எண்ணற்ற ஏஜென்டுகள் குவிந்து இருக்கிறார்கள்.

வாடகைத் தாய்

அப்படி ஏழ்மையின் காரணமாக வாடகைத் தாயாக இருந்த பெண்கள் சிலரைச் சந்தித்தோம்.

வள்ளி

“நிறைய கடன் வாங்கியிருந்தோம். கடனை அடைக்க முடியாம திண்டாடுனப்போ, கடன் வாங்கி இருந்த ஏஜென்ட்தான் வாடகைத் தாய் முறையைப் பற்றிச் சொன்னார். 60,000 ரூபாய் தரேன்னு சொன்னாங்க. நானும் ஒத்துக்கிட்டேன். அக்கம் பக்கத்து வீட்டுல உள்ளவங்ககிட்ட எல்லாம் ஊருக்குப் போறேன்னு சொல்லி தனியா ஒரு ஹாஸ்டல்ல தங்கியிருந்தேன். என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. எனக்குத் தேவையான எல்லாச் சத்துப் பொருள்களையும் கொடுத்தாங்க. ஏன்னா, குழந்தை உள்ள இருந்ததே. எட்டு மாசத்துல ஊசி போட்டு குழந்தைய ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க மா. அது ஆணா, பொண்ணா, கறுப்பா, சிவப்பா ன்னுகூட தெரியாது. பால் நிக்குறதுக்காக ஒரு ஊசி போட்டாங்க. நான் மயக்க நிலைல இருக்கும்போது 40,000 ரூபாய என்னோட கணவர்ட்ட கொடுத்துருக்காங்க. டிஸ்சார்ஜ் பண்ணி, வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் அவங்க கொடுத்த பணம் கம்மியா இருக்குங்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் எவ்வளவோ அலைஞ்சி திரிஞ்சி பாத்தேன். ஆனா, கொடுக்க வேண்டிய 20,000 கிடைக்கல. நல்லா ஏமாத்திட்டாங்க மா” என்று கூறி அழுத வள்ளி தொடர்கிறார்.

“அந்தக் குழந்தை பிறந்தநாளுக்கு ஒவ்வொரு வருஷமும், என் புள்ளைக மறக்காம கொண்டாடுவாங்க. எப்படியிருந்தாலும் உன் வயித்துல பொறந்ததுனால அந்தப் பாப்பா நம்ம தம்பியோ தங்கச்சியோ தானமான்னு என்கிட்ட கேப்பாங்க. வாடகைத் தாயாதான் இருந்தேன். ஆனா, அந்தக் குழந்தை என் வயித்துல தானே வளர்ந்தது. அதுவும் என் புள்ள தானே, என் வயித்துல முட்டுறதும், உதச்சதும் மறந்து போகுமா மா ” என்று கேட்கும் வள்ளிக்கு மௌனத்தைதான் பதிலாகத் தர முடிந்தது.

சுமதி

“என்னோட கணவர் குடிச்சி குடிச்சே செத்துப் போயிட்டாருமா. ரெண்டு புள்ளைக. ஒண்ணு பொட்டப்புள்ள. இன்னொன்னு சின்ன பையன். இவங்க படிப்புச் செலவுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தேன். என் கணவர் நிறைய கடன வேற வாங்கி வெச்சிட்டாரு. புள்ளைங்க மட்டுமல்லாம என் அம்மாவையும், மாமியாரையும் நான்தான் பாத்துக்கிட்டிருக்கேன். இவ்வளவு பெரிய குடும்பத்துக்குத் தனி ஆளா எப்படி உழைச்சி கொட்டுறது. அந்தாளும் போயிட்டானே.  இந்தக் கஷ்டத்தை எல்லாம் பாத்துட்டு ஒருத்தர், ஒரு ஏஜென்ட்கிட்ட அறிமுகப்படுத்திவிட்டாங்க. அவருதான் டாக்டருகிட்ட கூட்டிக்கிட்டுப் போய் கூடவே இருந்து டெஸ்ட் எல்லாம் எடுத்தாரு. அதுக்கப்புறம் என்னால குழந்தைய சுமக்க முடியுமுன்னு சொல்லி, ஊசி மூலமா கருவ செலுத்துனாங்க. வெளியூருக்குப் போறதா சொல்லிட்டு வேற ஒரு வீட்டுல தங்கியிருந்துதான் பிரசவம் பாத்தேன். பிரசவத்துக்கு முன்னாடி ராஜ மரியாத கொடுத்தாங்க மா….. ஆஸ்பத்திரியில. ஆபரேஷன் முடிஞ்சதும், இப்போ ஏதாவது பிரச்னைன்னு போனாகூட மதிக்க மாட்டேங்குறாங்க. கொடுக்குறதா சொன்ன பணத்துல 10,000 கம்மியாதான் கொடுத்தான் அந்த ஏஜென்டு . நான் வாடகைத் தாயா இருக்கப் போறேன்னு என்னோட குடும்பத்துல யாருக்கும் தெரியாது. குழந்தை எல்லாம் பிறந்த பிறகுதான் மாமியார் கிட்ட சொன்னேன். கேட்டதும் ரொம்ப அழுதாங்க” என்று சுமதி சொல்லும்போது நமக்கும் அவர் முகத்தில் இருக்கும் இறுக்கம் தொற்றிக்கொள்கிறது.

இந்தியாவில் மலிவான விலையில் குழந்தை என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இங்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தையினை பெற்றெடுத்துப் போகிறவர்கள் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு கணக்கின் படி, இந்தியாவில் ஆண்டுக்கு 5000 குழந்தைகள் வாடகைத் தாயால் பெற்றெடுக்கப்படுகிறார்கள். வாடகைத் தாய் வணிகத்தில் வருடத்துக்கு 400 மில்லியனுக்கு மேல் பணம் புரள்கிறது. வாடகைத் தாய் முறைகுறித்த எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் கிடையாது என்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்படியே சில நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன. சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்குக் கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தது. நாடாளுமன்ற நிலைக் குழு அதனது மசோதாகுறித்த ஆய்வினை சமர்ப்பித்து, அதன்பின் அது மற்றோர் அவையில் ஒப்புதல் பெற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்று பல கட்டங்கள் இருக்கின்றன.

பல்லாயிரம் கோடிகள் புரளும் வணிகத்தில், ஒவ்வொரு நாளும் பல்வேறு ஏழைப் பெண்கள் பலியாடாக்கப்படுகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்