ஃப்ளிப்கார்ட், அமேசானுக்குப் போட்டியாகக் களம் இறங்குகிறார், அம்பானி | Ambani to compete with Flipkart and amazon

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (17/11/2017)

கடைசி தொடர்பு:13:00 (17/11/2017)

ஃப்ளிப்கார்ட், அமேசானுக்குப் போட்டியாகக் களம் இறங்குகிறார், அம்பானி

ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்குப் போட்டியாக, விரைவில் முகேஷ் அம்பானி களம் இறங்க உள்ளார்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தைப்  படிப்படியாக விரிவாக்கிக்கொண்டே வருகின்றன. இந்தச் சூழலில், டெலிகாம் வர்த்தகத்தில் தனி முத்திரை பதித்த முகேஷ் அம்பானி, அடுத்ததாக ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்க உள்ளார். இதற்கான வேலைகள், அம்பானி குழுவினரின் தலைமையில் தயாராகி வருகிறது.

2027-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் எனக் கூறப்படும் அம்பானியின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் இணைந்து பணியாற்றும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில், ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், இந்தியாவில் அதிகப்படியான இணையப் பயனாளர்கள் உள்ளபோதும், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,  இந்தியாவில் ஓர் ஆண்டில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. இது, சீனாவின் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தின் ஒரு நாள் ஆஃபர் விற்பனையைவிட 40 சதவிகிதம் குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவுக்கென தனித்துவ ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை விரைவில் முகேஷ் அம்பானி குழு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.