குஜராத் தேர்தல்: பி.ஜே.பி-க்கு சவாலாகத் திகழும் 36 தொகுதிகள்...! | Gujarat election: BJP concentrates more in 36 seats in which congress candidates were tough fight !

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (17/11/2017)

கடைசி தொடர்பு:17:13 (17/11/2017)

குஜராத் தேர்தல்: பி.ஜே.பி-க்கு சவாலாகத் திகழும் 36 தொகுதிகள்...!

அமித் ஷா - பி.ஜே.பி.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 36 தொகுதிகளில், சுமார் ஐந்தாயிரம் வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு 22 ஆண்டுகளாக பி.ஜே.பி. ஆட்சியில் இருந்து வருகிறது என்பதோடு, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், இத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தவிர, குஜராத் தேர்தலின் முடிவு, எதிர்வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன், பி.ஜே.பி. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு உத்திகளுடன் பி.ஜே.பி-க்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் 13 தொகுதிகள், வடக்கு குஜராத்தில் 10, மத்திய குஜராத்தில் 11, தெற்கு குஜராத்தில் 2 ஆகிய 36 தொகுதிகளின் வெற்றி,தோல்வி என்பது ஐந்தாயிரம் வாக்குகளுக்குக் குறைவாகவே தீர்மானிக்கப்படும் என்று வெளியான தகவலால், பி.ஜே.பி. கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இத்தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 

மேலும் 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஐந்தாயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பி.ஜே.பி. வெற்றிபெற்ற தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துமாறு பி.ஜே.பி. நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி - குஜராத்

கடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தலைமையிலான குஜராத் பரிவர்த்தன் கட்சி, சுமார் 38 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-யின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அக்கட்சி போட்டியில் இல்லை. எனினும், பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸுக்கும், பி.ஜே.பி-க்கும் இடையே மிகக் கடுமையான போட்டியிருக்கும் என்று கருதப்படுவதால், இரு கட்சிகளுமே பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே, நடைபெறவுள்ள தேர்தலில் தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ள 121 பேரில் 35 எம்.எல்.ஏ-க்களுக்கு பி.ஜே.பி. மேலிடம் மீண்டும் வாய்ப்பு அளிக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது அமைச்சர்களாக உள்ள ஆறுபேர் உள்பட 35 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை, எந்தெந்தத் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியலை பி.ஜே.பி-யும், காங்கிரஸ் கட்சியும் வெளியிடவில்லை. எனினும், பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தி, வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இறுதிசெய்து விட்டதாகவே கூறப்படுகிறது. விரைவில் பி.ஜே.பி. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் குஜராத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதிசெய்யும் நிலையில் உள்ளது. ஓரிரு நாளில் இரு முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்ததும், குஜராத் தேர்தல் களம் தற்போது உள்ளதைவிட மேலும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு இடையே போட்டி பலமாக இருந்தபோதிலும், குஜராத் தேர்தல் முடிவுகள், இரு கட்சிகளுக்குமே வாழ்வா, சாவா போராட்டம்தான். இதை உணர்ந்தே அந்தக்கட்சிகள் பிரசார களத்தில் கடும் போட்டியில் உள்ளன. போட்டியில் பலம் பெறப்போவது யார் என்பது டிசம்பர் 18-ம் தேதி தெரிந்து விடும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்