வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/11/2017)

கடைசி தொடர்பு:18:20 (17/11/2017)

`ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை!' - நிர்மலா சீதாராமன் விளக்கம்

பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

நிர்மலா சீதாராமன்


பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 87 கோடி டாலர் ஆகும். இந்த ஒப்பந்தம் கூடுதல் தொகைக்கு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது
“காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் போர்விமானங்களை 1,020 கோடி டாலர் கொடுத்து வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது வெறும் 36 ரபேல் போர் விமானங்களை 870 கோடி டாலர் என்னும் மிக அதிக தொகை தொகை கொடுத்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது” என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விமர்சித்து வருகிறார்கள். குஜராத் தேர்தல் பிரசாரத்திலும் இது எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் எந்த முறைகேடுகளும் இல்லை. வெளிப்படைத்தன்மையுடன் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் இப்போதைய தேவை கருதியே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது விமானப்படையை வலுப்படுத்தும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரபேல் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. தங்கள் ஆட்சி காலத்தில் விமானப்படையைக் கவனிக்காமல் விட்ட காங்கிரஸ் இப்போது குற்றம் சொல்ல வந்துவிட்டது” என்றார்.