வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/11/2017)

கடைசி தொடர்பு:17:10 (18/11/2017)

பா.ஜ.க-வில் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் ராய், இன்று பா.ஜ.க-வில் இணைந்தார். 

ராகுல் ராய்


பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படும் படங்களில் ஒன்று 'ஆஷிகி.' இசை, பாடல், காதல் காட்சிகளுக்காக இந்தப் படம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. 4 ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்துப் புகழ்பெற்றவர், ராகுல் ராய் (வயது 49). சின்னத்திரையிலும் இவர் பிரபலமாக உள்ளார். இவர், இன்று பா.ஜ.க-வில் இணைந்தார். டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் இவர் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பா.ஜ.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் ராய், “இது எனக்கு முக்கியமான தினம். பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் இந்த நாட்டை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டுசெல்கின்றனர். இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை, இப்போது மாறி வருகிறது. இது, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதனைகள் ஆகும்” என்றார்.

ராகுல் ராய், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமல்லாமல் படத் தயாரிப்பிலும் இவர் ஈடுபட்டுவருகிறார்.