வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (18/11/2017)

கடைசி தொடர்பு:20:11 (18/11/2017)

‘டான்ஸ் டாக்டர்!’ உலக அழகிப் போட்டியின் இந்திய அழகியிடம் என்ன விசேஷம்? #MissWorld2017 

2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று (சனிக்கிழமை) இரவு சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் கலந்துகொள்ளும் இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டதோடு 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதையடுத்து,  உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளவிருக்கும் அழகியாக இவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக அழகி போட்டியாளர் மனுஷி

மனுஷி சில்லரின் அப்பா மித்ரா பாசு சில்லரும், அம்மா நீலம் சில்லரும் மருத்துவர்கள். டெல்லி செயின்ட் தாமஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடிந்த இந்த அழகி, இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். ஹரியானாவிலுள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்துவருகிறார். ஆனால், உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில், ஒரு ஆண்டு படிப்பை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார். இவர் ஒரு தேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞரும்கூட. அவ்வப்போது ஓவியமும் வரைவதும் பிடிக்கும்! விடுமுறை நாள்களில், பாரா கிளைட்டிங், ஸ்குபா டைவிங், பங்கி ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டுகளில் நேரம் கழிப்பது இவருக்கு மிகவும் பிடிக்குமாம்! இவருடைய ஃபிட்னெஸ் சீக்ரெட்டும் இதுவே. தினமும் யோகா பயிற்சி, எட்டு மணி நேரம் தூக்கம், தூங்குவதற்கு இரண்டு மணிநேரம்முன் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான் மனுஷியின் ஃபீட்னஸ் சீக்ரெட்ஸ்!

Manushi Chhillar

காலையில் எழுந்ததும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறுடன் தண்ணீர் குடிப்பார். காலைச் சிற்றுண்டியாக பழங்கள் அல்லது ஒட்ஸ் கஞ்சி சாப்பிடுவார். மதிய உணவுக்கு ஒரு கப் சாதத்துடன் கேரட், பீட்ருட் போன்ற காய்கறிகள், மாலை சிற்றுண்டியாக பழச்சாறுகள், டின்னருக்கு சிக்கன்/வெஜிடபிள் சூப், கொஞ்சம் புலாவ் வகை உணவுகள் - இது மனுஷியின் டயட் பிளான்!

இந்த அழகிப் போட்டியில் கலந்துகொள்வது பற்றி கூறுகையில், “என்னுடைய சிறுவயதிலிருந்தே இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்று விருப்பம் இருந்தது. உலக அழகிப் போட்டியில் பட்டம் வெல்வது என்னுடைய கனவு மட்டுமல்ல. என் பெற்றோர், நண்பர்களின் கனவும்கூட. இந்தப் போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், நான் இந்தப் பயணத்தில் நிறையக் கற்றுக்கொள்ளவிருக்கிறேன். என்னுடைய பள்ளிப் படிப்பை டெல்லியில் படித்ததும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. டெல்லியில் இருக்கும் பெண்கள் மிகவும் தன்னம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்கிறார்கள். டெல்லி பெண்களிடமிருந்துதான் நான் இதைக் கற்றுக்கொண்டேன்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

உலகப் போட்டியில் ஒரு பகுதியாக, "பியூட்டி வித் எ பர்பஸ்” (beauty with a purpose) என்ற தலைப்பில் தன்னார்வல புராஜெக்ட் ஒன்றைச் செய்யவேண்டும். இதற்காக, மனுஷி எடுத்துக்கொண்ட தலைப்பு, மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் பற்றி கிட்டதட்ட 20 கிராமங்களுக்குச் சென்று, விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தார். 

தற்போது, உலக அழகிப் போட்டியில் முதல் 40 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மனுஷி! கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண் என்கிற பெருமைக்கு உள்ளானார். 17 வருடங்கள் கழித்து, மனுஷி சில்லர் இந்த வரலாற்றை மீண்டும் எழுதுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்