வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/11/2017)

கடைசி தொடர்பு:19:36 (18/11/2017)

பிரியாணிக்காக மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்....போலீஸுக்குப் போன பஞ்சாயத்து!

தெலங்கானாவில் பிரியாணி சுவையாக சமைக்கவில்லை என்று ஒருவர் தன் மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் கணவர்மீது போலீஸில் புகார் அளித்து இருக்கிறார்.

பிரியாணி


தெலங்கானா மாநிலம்  வாரங்கல் மாவட்டம் இல்லாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். கம்ப்யூட்டர் இன்ஜினீயர். இவருடைய மனைவி மானஸா (வயது 25). ராஜேந்திர பிரசாத்துக்குப் பிரியாணி என்றால் உயிர். மனைவியை அடிக்கடி பிரியாணி செய்யச் சொல்லி கேட்பது வழக்கம். ஆனால், பிரியாணி சுவையாக இல்லையென்றால் மனைவிக்கு உதை விழும். சம்பவத்தன்று இதேபோல் பிரியாணி சுவையாக இல்லாத ஆத்திரத்தில் மனைவியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.
 
வீட்டுக்கு வெளியே மானாஸா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் என்னவென்று விசாரித்தனர். அப்போது காரணம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வலியுறுத்தினர். அதன்படி மானஸா புகார் அளித்தார். போலீஸார் ராஜேந்திர பிரசாத்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்தில் இதேபோல் ஒருமுறை ராஜேந்திர பிரசாத் வீட்டை விட்டு துரத்தியதாக மானஸா போலீஸாரிடம் கூறியுள்ளார். வரதட்சணைக் கேட்டு கணவர் கொடுமை செய்ததாகவும் மானாஸா சொல்லியுள்ளார். போலீஸார் விசாரித்துவருகின்றனர்.