காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Photo Credit: INC Twitter


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளார். இதனால், கட்சித் தலைவர் பொறுப்பை தன் மகன் ராகுலிடம் ஒப்படைக்க அவர் முடிவுசெய்துள்ளார். மூத்த தலைவர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ராகுல் காந்தி, இப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கு, அக்கட்சியின் காரியக் கமிட்டியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதற்காக, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 5-ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற, டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, டிசம்பர் 11-ம் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பெற்றார் சோனியா காந்தி. 19 ஆண்டுகாலம் தலைவர் பதவி வகித்த அவர், டிசம்பர் மாதத்தோடு விடைபெறுகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!