வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (20/11/2017)

கடைசி தொடர்பு:15:28 (20/11/2017)

“அதிகபட்ச சம்பளத்துக்குத் தகுதியான தொழில் ‘தாய்மை’! ” - உலக அழகி மனுஷி சில்லர்

தேவதைகளுக்குப் போட்டி. 108 நாடுகளிலிருந்து சிட்டாகப் பறந்து சீனாவின் சான்யா நகருக்குள் சங்கமித்தது அழகு தேவதைகளின் பட்டாளம். பல சுற்றுகளை வெற்றிகரமாகக் கடந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, கென்யா மற்றும் மெக்ஸிகோ நாட்டு அழகிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகினர். உலகின் சிறந்த அழகிக்கான தேடலின் முடிவு அறிவிக்கும் தருணம், அனைத்து தேவதைகளின் மின்மினுக்கும் கண்களிலும் ஒரே பதற்றம். `மனுஷி சில்லர், 2017-ம் ஆண்டின் உலக அழகி’ என்ற அறிவிப்பு வெளியானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குதூகலமானது இந்தியா. 

சில்லர்

20 வயதான மனுஷி, பிறந்து வளர்ந்தது ஹரியானா மாநிலத்தில். மருத்துவம் பயிலும் மனுஷியின் பெற்றோரும் மருத்துவர்கள். கல்விக்கு முக்கியத்துவம் தரும் குடும்பத்தின் முதல் ஃபேஷன் ப்ரியர் இந்த சில்லர். 2017-ம் ஆண்டின் `மிஸ் இந்தியா' போட்டியின் வெற்றியாளரான இவருக்கு, சமூகசேவையில் அதிக ஆர்வம். அவரின் வாழ்நாள் லட்சியம், மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புஉணர்வை இந்தியா முழுவதும் பரப்புவதே. இதற்காக`புராஜெக்ட் ஷக்தி' எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளார். அழகிப் போட்டிக்காக தன் ஒரு வருடக் கல்விக்கு ஓய்வுவிடுத்த மனுஷிக்கு, மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து இதய அறுவைசிகிச்சை மருத்துவராகி, சிறு கிராமங்களில் லாபமற்ற மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது ஆசை.

ரீட்டா ஃபாரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தாமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோரின் உலக அழகி வரிசைப் பட்டியலில் இன்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் மனுஷி சில்லருக்குப் பிடித்த அழகி, ரீட்டா ஃபாரியா. அவரது பாதையைப் பின்பற்றியதாகக் கூறும் சில்லர், “அழகிப் போட்டியில், இந்தியாவின் முதல் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், வெற்றியையும் தன் வசமாக்கினார் ரீட்டா. மேலும், அவர் பேரார்வம்கொண்ட மருத்துவப் படிப்பையும் கைவிடவில்லை. அழகிப் போட்டி முடிந்தவுடன், கல்வியையும் வெற்றிகரமாக முடித்து தன் வாழ்நாள் லட்சியமான சிறந்த மருத்துவராவதற்கு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டார்" என்று பூரிக்கிறார். மனுஷியின் விருப்பமும் இதுதான்.

மனுஷி சில்லர்

பேஸ்ட்டல் பிங்க் நிறம் ஜொலிக்கும் ஆடையில், தங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் `கேள்வி-பதில்' களத்தில் தன்னம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தார் நம் நாட்டு அழகுப் பதுமை. மனுஷியின் வாழ்வை புரட்டிப் போட்ட கேள்வி இதோ...

“உயர்ந்த ஊதியம் கொடுக்கத் தகுதியான தொழில் எது... அதற்கான காரணம் என்ன?”

அரங்கையே அதிரவைத்த சில்லரின் அசத்தலான பதில், “நான் என் அம்மாவுக்கு மிகவும் நெருக்கமானவள் என்பதால், உயர்ந்த ஊதியம் கொடுக்கவேண்டிய தகுதியான தொழில் `தாய்மை'தான். பணம், அவளின் வருமானமல்ல. உண்மையான அன்பும் மரியாதையுமே அவளுக்கான சம்பளம். தன் குழந்தைகளுக்காக அனைத்துத் தாய்களும் ஈடில்லா தியாகங்களைச் செய்கிறார்கள். எனவே, உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தொழில் `தாய்மை' ” என்று கூறி கைதட்டல்களை அள்ளினார்.

இந்தச் சிறப்பான பதிலே, 2016-ம் ஆண்டின் உலக அழகி ஸ்டெபானி டெல் வெலியிடமிருந்து கிரீடத்தைப் பறிக்கக் காரணமானது. அதனுடன் `பியூட்டி வித் பர்ப்பஸ் (Beauty with Purpose)' விருதையும் தட்டிச் சென்றார்.

மனுஷி சில்லர்

“ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா வரிசையில் `உலக அழகிப் பட்டம்' சில்லருக்கும் பாலிவுட்டில் தடம் பதிக்க படிக்கல்லாக அமையுமா '' எனக் கேட்டதுக்கு,

“உலக அழகிப் பட்டம் பாலிவுட்டில் மட்டும் தடம் பதிப்பதற்கான படிக்கல் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தப் பட்டத்தை வைத்து எந்தத் துறையிலும் தடம் பதிக்கலாம்” என்று நெகிழ்கிறார்.

பல லட்சியங்கள், சமூக அக்கறைகளைச் சுமந்துகொண்டு கெத்தான ‘கேட் வாக்’கிட்டு, தனக்கு ஆதரவளித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியை ட்வீட் செய்து இனிதே முடித்துவைத்தார் 2017 -ம் ஆண்டின் உலக அழகி `மனுஷி சில்லர்!'


டிரெண்டிங் @ விகடன்