வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (20/11/2017)

கடைசி தொடர்பு:21:30 (20/11/2017)

`பத்மாவதி' திரைப்பட்டத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன்! : ம.பி முதல்வர் சௌகான் அறிவிப்பு

பாலிவுட்டில் உருவாகியுள்ள `பத்மாவதி' திரைப்படத்துக்கு ஒரு தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், `பத்மாவதி' திரைப்படத்திலிருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை, அதைத் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டேன்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

shivraj singh chauhan

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவுத் திரைப்படம், 'பத்மாவதி.' ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜபுத்திர சமூக மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு, படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றது. 'பத்மாவதி' திரைப்படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 (Viacom18) அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் சௌகான், `பத்மாவதி ராணியின் தியாகத்தைப் பற்றி நாங்கள் சிறு வயது முதல் படித்துவருகிறோம். வரலாற்றைத் திரித்துக்கூறுவதை ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம். அந்தப் படத்திலிருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்வரை, அதை வெளியிட அனுமதிக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.