காங்கிரஸ் முன் உள்ள சவால்களை சமாளிப்பாரா ராகுல் காந்தி ? | Will Rahul Gandhi be the Congress president before Gujarat election? Will face the challenges of party?

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (21/11/2017)

கடைசி தொடர்பு:15:32 (21/11/2017)

காங்கிரஸ் முன் உள்ள சவால்களை சமாளிப்பாரா ராகுல் காந்தி ?

ராகுல் - சோனியா

ருவழியாக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரத் தயாராகி விட்டார், தற்போது துணைத்தலைவராக இருப்பவரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் அவரின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, 'அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. "இதற்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் முதல் தேதியன்று தொடங்குகிறது. டிசம்பர் 4-ம் தேதி மனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாள். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போது பதவியில் உள்ள சோனியா காந்தி கடந்த 1998-ம் ஆண்டு அப்பதவியை ஏற்றார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் மிக நீண்டகாலம், அதாவது 19 ஆண்டுகள் இருந்தவர் என்ற பெருமையை சோனியா பெற்றுள்ளார். சோனியா காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவரின் தலைமையில் 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சோனியா காந்திக்கு அண்மைக்காலமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. ஓரிருமுறை வெளிநாட்டுக்குச் சென்று, சோனியா சிகிச்சை பெற்றார். இதற்கிடையே உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலின்போது, பிரசாரத்திற்கு இடையே சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிரசாரத்தை ரத்துசெய்து விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் புதுடெல்லி திரும்பி, ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சோனியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அரசியல் கூட்டங்கள், கட்சி விவகாரங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். இதற்கிடையே, கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் ராகுல் காந்தியைத் தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். தற்போது, அதற்கான சூழல் உருவாகியுள்ளது. 

சோனியாவுடன் ராகுல்

எனினும், ராகுல் தலைமைப் பதவிக்கு வருவதற்கு எதிராக, கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்திருந்தார். வேறுசில மூத்த தலைவர்களும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை அப்படியில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவருமே ராகுலின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி,  போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே தேவை ஏற்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் யாரும் போட்டியிடாதபட்சத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நேரத்திலேயே அவர் தலைவராவது உறுதியாகி விடும். அதன்பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியும், குஜராத்தில் ஆளும் பி.ஜே.பி-யும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
ராகுல் காந்திகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதியே கடைசி நாள் என்பதால், ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் போட்டியிடாதபட்சத்தில், அவரே தலைவராக அறிவிக்கப்படுவார். எனவே, குஜராத் மாநில தேர்தலுக்கு முன்னரே, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பார் என்பது உறுதியாகி உள்ளது.

ராகுல் காந்தியின் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி, 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்...அதற்கு முன் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளதால், ராகுல் காந்திக்கு கட்சியை வளர்ச்சிப் பாதைக்கும், வெற்றிப்பாதைக்கும் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தன் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டு சாதுர்யத்துடன் சமாளிப்பாரா காங்கிரஸின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ராகுல் காந்தி? பொறுத்திருந்து பார்ப்போம்....!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close