வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (21/11/2017)

கடைசி தொடர்பு:17:02 (21/11/2017)

`பத்மாவதி'க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் ஆதித்யநாத்!

இந்தி திரைப்படமான `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ``பத்மாவதி திரைப்படத்திலிருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் கட்டாயமாக நீக்கப்பட வேண்டும்' என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

ஆதித்யநாத்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவுத் திரைப்படம், 'பத்மாவதி.' ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனேவும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜபுத்திர சமூக மக்கள், `பத்மாவதி'க்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு, படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. 'பத்மாவதி' திரைப்படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 (Viacom18) அறிவித்துள்ளது.

இதையொட்டிதான் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், `எங்கள் நிலையைப் பற்றி நாங்கள் தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம். இனிமேல், `பத்மாவதி' திரைப்படம் குறித்து எந்த குழப்பங்களும் இருக்கக் கூடாது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் எங்கள் கருத்தைப் பற்றி எழுத்துபூர்வமாக அறிக்கையை சமர்பித்துவிட்டோம். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் `பத்மாவதி' திரைப்படத்திலிருந்து நீக்கப்படவில்லை என்றால், உத்தரப் பிரதேசத்தில் அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம்' என்று உறுதியாக கூறியுள்ளார்.