விஜய் மல்லையாவுக்கு சோனியா மருமகன் கொடுத்த பதிலடி!

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை தன்னுடன் ஒப்புமைப்படுத்தி விஜய் மல்லையா கூறியதற்கு ராபர்ட் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ராபர்ட் வதேரா

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட முயற்சியின்போது கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், “ராபர்ட் வதேராவைப்போல நானும் 'அரசியலுக்குப் பலியானவன்’” என தன் தரப்பு வாதத்தில் விஜய் மல்லையா குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ராபர்ட் வதேரா தன் ட்விட்டர் பக்கத்தில், “நான் அரசியலுக்குப் பலியானவன். ஆனால், என்னுடைய பதவியை ஒரு நாளும் நான் துஷ்பிரயோகம் செய்ததில்லை. மேலும் நம்முடைய நீதி அமைப்பு மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியாவிலிருந்து யாருடைய பணத்தையும் தூக்கிக்கொண்டு நான் ஓடவில்லை. அவருக்கு என் அறிவுரை என்னவென்றால், ‘இந்தியாவுக்குத் திரும்புங்கள். சட்டபூர்வமாக அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சந்தியுங்கள். என் பெயரை உபயோகப்படுத்துவதைத் தவிருங்கள். எந்தவொரு விஷயத்திலும் தங்களுடன் இணைய நான் விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!