”புகைப்பிடிப்பது தவறா” - அருந்ததி ராயின் ஸ்மோக்கிங் படம் எழுப்பிய விவாதம்! | Arundati Roy's old photo of smoking becomes topic of discussion in twitter

வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (21/11/2017)

கடைசி தொடர்பு:19:51 (21/11/2017)

”புகைப்பிடிப்பது தவறா” - அருந்ததி ராயின் ஸ்மோக்கிங் படம் எழுப்பிய விவாதம்!

அருந்ததி ராய்

புது டெல்லியைச் சேர்ந்த மயங்க் அஸ்டன் சூஃபி (Mayank Austen Soofi) என்ற எழுத்தாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் எழுத்தாளர் அருந்ததி ராயின் இளம் வயது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அருந்ததி ராய் சிகரெட் ஒன்றைப் புகைத்துக்கொண்டிருக்கிறார். 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' (The God of Small Things) என்ற புத்தகத்தை அருந்ததி ராய் எழுதுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

'அது எப்படி அருந்ததி ராய் பிடித்த சிகரெட் வில்ஸ்தான் என்று உங்களுக்குத் தெரியும்' என்று ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு, எழுத்தாளர் மயங்க் அஸ்டென் சூஃபி, 'ஏனென்றால், நான் அவரின் புத்தகத்தைப் பலமுறை படித்திருக்கிறேன்' என்று பதில் அளித்திருத்தார். 

மற்றொருவர், 'இது, காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் முன்பு, ஆனால், 'In Which Annie Gives It To Those Ones' திரைப்படத்துக்குப் பிறகுதானே' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தத் திரைப்படம், அருந்ததி ராய் எழுத, அவரின் முன்னாள் கணவர் பிரதீப் கிஷன் இயக்கியது. 1989-ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் மற்றொரு விசேஷம், நடிகர் ஷாருக்கான் தனது திரைப்பட வாழ்க்கையில் தொடக்க காலத்தில் நடித்தது. 

இப்படி ஜாலியாக விவாதம் சென்றுகொண்டிருக்க, 'ஒரு பெண் புகைபிடிப்பதை சமூகப் பிரச்னையாகக் கருதாமல் விட்டுவிடுமா இந்த உலகம். வாவ்! இதுவல்லவா பெண்களின் முன்னேற்றம்' என்று ஒருவர் கிண்டல் வழிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். 

அருந்ததி ராயின் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அவரின் நெருங்கிய தோழி பாலசரஸ்வதியும், பைஜமா அணிந்து புகைப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தை ஒருவர் பதிவிட்டு, 'சுயசிந்தனை உள்ள எல்லாப் பெண்களும் இப்படியான சுதந்திரத்தை அனுபவித்திருக்கிறார்கள்' என்று சொல்லியிருக்கிறார். 

அருந்ததி

'அருந்ததி ராய் புகைபிடிக்கிறார் என்பதைச் சிலரால் ஜீரணிக்கமுடியவில்லை. ஒரு பெண் புகைபிடிக்கிறார் என்பதையே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இது என்ன ஆச்சர்யமா. ஆனால், ’போல்டு அண்டு பியூட்டிஃபுல்!’ என்கிறார் ஒருவர். 

பெண்கள் புகைப்பதுதான் பெண்ணியமா அல்லது தான் பிரபலமாக வேண்டும் என்று செய்யும் வேலையா என்பது போன்ற விமர்சனங்களும் குவிந்த வண்ணமிருக்கின்றன. 'இது ஒரு போட்டோஷூட்டுக்காக எடுக்கப்பட்டது. இதற்கு ஏன் இவ்வளவு விவாதம்' என்றும் ஒருவர் தனது பார்வையைப் பதிவிட்டிருந்தார். 

இதற்கு அடுத்து விவாதம், இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது என்பது. இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அந்த எழுத்தாளரே, 'கரோல் புல்பர்னி (Carol Bulbarini) என்ற இத்தாலியப் புகைப்பட கலைஞர் எடுத்திருக்கிறார். ஆனால், இது, 'In Which Annie Gives It To Those Ones' என்ற படத்தில் எடுக்கப்பட்டது என்றும் சிலர் விவாதித்தனர். 

தன்னைப் பற்றி இப்படி ஒரு விவாதம் சமூக ஊடகத்தில் சுற்றுவது பற்றி அருந்ததி ராய்க்குத் தெரியும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், அவர் ட்விட்டரில் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. பிரபலமானவர்களின் அதிலும் பெண்களாக இருப்பின் எந்த ஒரு விஷயமும் பெரிய அளவில் விவாதங்களைக் கிளப்பிவிடுகிறது. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்