வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (22/11/2017)

கடைசி தொடர்பு:17:56 (22/11/2017)

500, 1,000 ரூபாய் நோட்டுகளைப்போல காசோலைகளுக்குத் தடை..! மத்திய அரசு திட்டம்?

500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதைப்போல மத்திய அரசு  காசோலைகளுக்குத் தடை விதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

காசோலை

 

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, உயர் மதிப்புள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அதன் ஒருபகுதியாக, மத்திய அரசு எதிர்காலத்தில் காசோலைகளுக்குத் தடை விதிக்கக்கூடும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி பிரவீன் காந்தேல்வால் கூறினார். 

மும்பையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பேசிய அவர், “புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ரூ.25,000 கோடி செலவிடுகிறது. அவற்றின் பாதுகாப்பு போன்றவற்றுக்கு மேலும் ரூ.6,000 கோடி செலவிடப்படுகிறது. இதைக் குறைக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பது அவசியம். வங்கிகள், டெபிட் கார்டு மூலமான பணப் பரிமாற்றத்துக்கு 1 சதவிகிதமும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிவர்த்தனை 2 சதவிகிதமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தத் தொகையை வங்கிகளுக்கு அரசு நேரடி மானியமாக வழங்கினால், இந்தக் கட்டணங்கள் ரத்துசெய்யப்படும். இதன்மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். ஆனால், இப்போதும் மக்கள் அதிக அளவில் நேரடி ரூபாய் நோட்டுகள் வாயிலாகத்தான் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் 80 கோடி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உபயோகத்தில் உள்ளன. அதில் 5 சதவிகிதம்தான் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள ஏ.டி.எம்-களிலிருந்து பணத்தை எடுக்கவே உபயோகப்படுத்தப்படுகின்றன” என்றார்.

காசோலைகளைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தால் வர்த்தகர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில், வர்த்தகர்களின் 95 சதவிகித பணப் பரிமாற்றம், காசோலைகள் வாயிலாகவே நடக்கின்றன.