வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/11/2017)

கடைசி தொடர்பு:20:40 (22/11/2017)

குஜராத்தில் பத்மாவதி படத்துக்குத் தடை!

சர்ச்சையில் சிக்கியுள்ள பத்மாவதி படத்தை குஜராத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். 

பத்மாவதி


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவுத் திரைப்படம், 'பத்மாவதி.' ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனேவும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் வரலாற்றை திரித்துள்ளதாகக் கூறி ராஜபுத்திர அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 'பத்மாவதி' திரைப்படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டங்களைத் தொடர்ந்து, படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை குஜராத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். விஜய் ரூபானி செய்தியாளர்களிடம், “இந்தப் படத்தில் பல பிரச்னைகள் உள்ளன. இது ராஜபுத்திர சமூகம் உள்பட பல சமூக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாய் உள்ளது. ஆகவே, இந்தப்படம் குஜராத்தில் திரையிட அனுமதிப்படாது” என்றார்.

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.