வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (22/11/2017)

கடைசி தொடர்பு:21:18 (22/11/2017)

பிரதிநிதித்துவம் இல்லாத ஜி.எஸ்.டி கவுன்சில்... தொழில் துறையினர் கவலை! #GST

ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. கடந்த வாரம், 178 பொருள்களின் வரியைக் குறைத்தது. இன்னும் என்னென்ன வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து, இந்தத் துறையில் உள்ளவர்களிடம் பேசினோம். 

GST

தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேலுவிடம் பேசியபோது...

``ஜி.எஸ்.டி வரி, முற்போக்கான வரி. இதை அமல்படுத்தியது வரவேற்கத்தக்க விஷயம்தான். 17 வரிகளை ரத்துசெய்துவிட்டு ஒரு பொருளுக்கு இந்தியா முழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருப்பதாலும், சமூகநலத் திட்டங்கள் நிறைய செய்யவேண்டி இருப்பதாலும் இதர நாடுகளில் இருப்பதுபோல் எல்லா பொருள்களுக்கும் ஒரே வரிமுறையைக் கொண்டு வர முடியாது. உணவுப்பொருள்கள் என்றால் குறைந்த வரி,  அவசியமான பொருள்களுக்கு மிதமான வரி, ஆடம்பரப் பொருள்கள் என்றால் அதிக வரி என்ற வகையில் 5, 12, 18, 28 என்ற சதவிகிதத்தில் நான்குவிதமான வரிமுறையைக் கொண்டுவந்தார்கள். இதை வரவேற்றோம். 

 

ஆனால், நல்ல வரித்திட்டமான ஜி.எஸ்.டி-யை மத்திய அரசு அமல்படுத்தியபோது நிறைய தவறுகளைச் செய்து, சிறு தொழில் நிறுவனங்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். இந்தத் தவறுக்கு முக்கியக் காரணம், ஜி.எஸ்.டி கவுன்சில். இந்த ஜி.எஸ்.டி குறித்த குழுவில் மாநில அமைச்சர்களும், மத்திய அரசின் நிதியமைச்சக அதிகாரிகளும், அமைச்சர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். வரி வசூல்செய்து செலுத்துபவர்கள் சார்பில் எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை. தொழில்வணிகம் செய்பவர்கள்தான் களத்தின் உண்மை நிலையை அறிந்தவர்கள். ஆனால், அவர்களிடம் சரியான ஆலோசனை பெறாமல் அதிகாரிகள் மட்டத்திலேயே முடிவெடுத்து அமலாக்கம் செய்கிறார்கள். ஜி.எஸ்.டி கவுன்சிலில் வணிகச் சங்கப் பிரதிநிதிகள் 10 பேரைச் சேர்த்திருந்தால்கூட நிறைய ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள். 

தற்போது நிறைய பொருளுக்கு வரியைக் குறைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது, செய்த தவறைத்  திருத்திக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் நிறைய திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது. இனியாவது, ஜி.எஸ்.டி கவுன்சிலில் தொழில் வணிகப் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். இதன்மூலம் தவறுகள் ஏற்படாமல், தொழில்வணிக வளர்ச்சி பாதிக்கப்படாமல், வரிவருவாய் அதிகம் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒரு வணிகப் பிரதிநிதி என்ற வகையிலாவது ஜி.எஸ்.டி கவுன்சிலில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 

GSTஜி.எஸ்.டி கொண்டுவருவதற்கு முன்னர் குட்கா, புகையிலை போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்கள், அதி ஆடம்பரப் பொருள்கள், உயர்தர கார்கள், குளிர்பானங்கள் எனக் குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டும் 28 சதவிகிதம் என்று சொன்னார்கள். ஆனால், 250-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு 28 சதவிகித வரியைப் போட்டுவிட்டார்கள். எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்ற பிட்மென்ட் கமிட்டிதான் ஆலோசனை வழங்குகிறது. இதுவும் அதிகாரிகள்கொண்ட குழு அமைப்புதான். இந்த அமைப்பு வழங்கிய ஆலோசனை அடிப்படையில்தான் வரியை நிர்ணயித்தார்கள். 

தற்போது 178 பொருள்களின் வரியை 28 சதவிகிதத்திலிருந்து குறைத்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னமும் 50 பொருள்கள் இருக்கின்றன. இதைக் குறைத்து சரியாக அடையாளம் காணப்பட்ட பொருள்களுக்கு மட்டும் 28 சதவிகித வரி போட வேண்டும். 28 சதவிகித வரி என்பது, பொருளின் விலையில் மூன்றில் ஒரு பங்கு. இவ்வளவு வரியை மக்களால் தாங்க முடியாது. இதனால் வரி ஏய்ப்பு நிலை உருவாகும். உண்மையாக வரி செலுத்துபவர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்களுடன் போட்டிபோட முடியாது. உண்மையாக வரி செலுத்தும் வியாபாரிகள், விற்பனையில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொழில் நசிந்துபோவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் வரி ஏய்ப்புகளும் அதிகரிக்கும். 

பல வரிகளையும் ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி கொண்டுவந்தபோது மத்திய / மாநில அரசு வரிவருவாயில் பாதிப்பு இல்லாமல் சமநிலையில் இருக்கும் வகையில் `ரெவன்யூ நியூட்ரல் ரேட்' என்று 18 சதவிகிதத்தை முடிவுசெய்தார்கள். இதன்படி 18 சதவிதத்துக்குமேல் வரி போட்டிருக்கக் கூடாது. அப்படியும் நிர்ணயிக்கவில்லை. 5 சதவிகிதம் வரி போடவேண்டிய பல பொருள்களுக்கு 12 சதவிகித வரியும், 12 சதவிகித வரி போடவேண்டிய பல பொருள்களுக்கு 18 சதவிகித வரியும், 18 சதவிகித வரி இருக்கவேண்டிய இடத்தில் 28 சதவிகித வரியும் போட்டிருக்கிறார்கள். வரி விதிப்பதற்கு முன்னரே `இந்த வரி, பொதுமக்களையும் வணிகர்களையும் பாதிக்குமா?' என்பதை ஆய்வுசெய்து சரியான வரியை நிர்ணயித்திருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுக்கு 18 சதவிகித வரி விதித்துவிட்டனர். இதற்கு ஐந்து சதவிகித வரி என்று ஆரம்பத்திலேயே நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பிறகு மாற்றியிருக்கிறார்கள். ஆரம்பத்தில், பூஜை பொருள்களுக்கு 12 சதவிகித வரி மற்றும் 18 சதவிகித வரி நிர்ணயம் செய்திருந்தார்கள். தற்போது ஐந்து சதவிகித வரி என்று மாற்றியிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் கற்புரவில்லைக்கு 12 சதவிகித வரி இருக்கிறது. இது கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னாலும், இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜி.எஸ்.டி கவுன்சிலில் தொழில்வணிகப் பிரதிநிதிகள் அங்கமாக இருந்தால் மட்டுமே விளங்கவைக்க முடியும். 

தாவரத்திலிருந்து பெறப்படும் பயோடீசல் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசே உதவி செய்தது. இதனால் நிறைய பேர் பயோடீசல் தயாரிப்புப் பணியில் இறங்கினார்கள். இதற்குத் தேவையான `Stearin' என்ற மூலப்பொருள் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் இதற்கு இறக்குமதி வரி இல்லை. தற்போது இறக்குமதிக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் பயோடீசலுக்கு ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்னர் ஆறு சதவிகிதம் கலால்வரி விதித்தனர். தற்போது ஜி.எஸ்.டி-யில் 18 சதவிகிதம் வரி நிர்ணயித்துள்ளனர். இதனால் பயோடீசல் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மூடிவிட்டார்கள். இதை எங்கு போய்ச் சொல்வது எனத் தெரியவில்லை.

இதைப்போலவே, ஆரம்பத்தில் வெட் கிரைண்டருக்கு ஜி.எஸ்.டி வரியாக 28 சதவிகிதம் என்று நிர்ணயித்திருந்தார்கள். இதை தற்போது 12 சதவிகிதம் எனக் குறைத்திருக்கிறார்கள். ஆனால், மிக்ஸி, வாஷிங்மெஷின், குளிர்சாதனப் பெட்டிக்கு இன்னும்கூட 28 சதவிகிதம் என வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் நடுத்தரக் குடும்பத்தில் அன்றாடப் பொருள்களாக மாறிவிட்ட நிலையில், அதற்கு 28 சதவிகிதம் வரி போட்டது எந்த அளவுக்கு நியாயம் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் மக்களை கஷ்டப்படுத்திய பிறகு, வரியைக் குறைத்துவருகிறார்கள். இன்னமும் பல பொருள்களை, 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதத்துக்குக் கொண்டு வர வேண்டும். 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் கொண்டு வர வேண்டும். 

தற்போது வரை ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு 50 முதல் 60 அறிக்கைகள் (நோட்டிஃபிக்கேஷன்) வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு பொருளுக்கு என்ன வரி என்பதையும் கணக்குத் தணிக்கையாளர்களே சொல்ல முடியாத நிலையில் குழம்பிபோய் இருக்கிறார்கள். இந்தத் தேதியிலிருந்து இந்தத் தேதி வரை ஒரே வரி. அதன் பிறகு வேறு ஒரு வரி என்று குழப்பம்தான் நிலவுகிறது. இதை வியாபாரிகள்கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். 

வரி தாக்கல் செய்வதற்கான படிவத்திலும் குழப்பங்கள் நிறைந்தாகவும், கடினத்தன்மைகொண்டதாகவும் இருக்கிறது. இந்தப் படிவங்களை நிரப்புவதற்கு, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. திறமையானவர்களே தடுமாறும் வேளையில் சிறு தொழில் நிறுவனத்தார் எப்படித் தாக்கல்செய்வார்கள் எனத் தெரியவில்லை. ஜி.எஸ்.டி வரி தாக்கலுக்கான படிவத்தை எளிமைப்படுத்த வேண்டும். மேலும், மாத இறுதியில் தாக்கல் செய்யும்போது இன்டர்நெட் சர்வர் செயலிழந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதையும் எங்கு போய்ச் சொல்வது எனத் தெரியவில்லை. இப்போது ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யவேண்டியதை ஜனவரி மாதம் வரை நீட்டித்திருக்கிறார்கள். 

சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் பொருள்களின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், அதற்கு இ-வே (E-Way) பில் முறையை ஜனவரி மாதத்தில் அமல்படுத்த இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த பில்லை ஜி.எஸ்.டி வெப் போர்ட்டலிலிருந்து (Web Portal) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் சொல்கிறார்கள். இதற்கு எல்லா பகுதிகளிலும் இன்டர்நெட் வசதி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். 

மலேசியாவில் அனைத்து வகையான பில்களும் குறிப்பிட்ட இணையதள முகவரியில் இருந்துதான் எடுத்து வழங்கும் முறை இருக்கிறது. இதில் 50,000 ரூபாய் என்று வரம்பு அளவு எதுவும் கிடையாது. எல்லா பில்களும் அரசு Web Portal-லில் இருந்துதான் போட வேண்டும். சரக்கு வாங்கியவர்கள் விவரங்களும், விற்பனை செய்தவர்கள் விவரங்களும் உடனே கிடைத்துவிடும். இதனால் எல்லா விவரங்களையும் வரித்துறை எளிதில் அறிந்துகொள்ள முடியும். மாத ரீட்டர்ன் தாக்கல் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். மாதம் பல ரீட்டர்ன் தாக்கல் செய்யவேண்டியதில்லை. இதனால் யாரும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. இதுபோன்ற வசதியை இங்கு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கு எல்லா இடங்களிலும் இணைய வசதியைக் கொண்டு வர வேண்டும் அல்லது முதல் கட்டமாக இன்டர்நெட் இருக்கும் இடங்களில் கொண்டுவரலாம். இதனால் பெரும்பான்மையான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்" என்றார் ரத்தினவேலு. 

வணிகம் மற்றும் தொழில் துறையினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு மக்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.


டிரெண்டிங் @ விகடன்