வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (23/11/2017)

கடைசி தொடர்பு:13:05 (23/11/2017)

பத்திரிகையாளர் படுகொலை: திரிபுராவில் தலையங்கத்தைத் தவிர்த்த பத்திரிகைகள்!

திரிபுராவில், பத்திரிகையாளர் சுதீப் தத்தா பௌமிக் கொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று பெரும்பாலான பத்திரிகைகள் தலையங்கம் இல்லாமல் வெளிவந்தன. 


வங்கமொழியில் வெளியாகும் ’சியாந்தன் பத்திரிகா’ நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர், சுதீப் தத்தா பௌமிக். தலைநகர் அகர்தலா அருகில் உள்ள திரிபுரா மாநில ரைபிள்ஸ் படைப் பிரிவுத் தளத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற அவரை, அந்தப் படையைச் சேர்ந்த வீரர் நந்து ரியாங் என்பவர் சுட்டுக் கொன்றார். முன்னதாக, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. திரிபுரா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, நந்து ரியாங் கைதுசெய்யப்பட்டார். இந்தத் தகவலை காவல்துறை அபிஜித் சப்தரிஷி என்ற காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

இந்த நிலையில், பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மாநில அரசுக்கும் துணை ராணுவப் படைக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள பத்திரிகைகள் தலையங்கப் பகுதியை இன்று வெற்றிடமாகப் பிரசுரித்துள்ளன. மேலும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் மாநிலம் தழுவிய முழுக் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.