இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு வழங்கியது ஏன்? தேர்தல் ஆணையத்தின் 83 பக்க தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைக்கு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உரிமை கோரியதால், அதை முடக்கி கடந்த மார்ச் 22-ல் தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்தன. அதன்பின்னர் இரு அணிகள் இணைந்து பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தன. சசிகலா தரப்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இரட்டை இலை


இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரித்துவந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. தீர்ப்பை மொத்தம் 83 பக்கங்களில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.கவுக்கு இரட்டை இலைச்சின்னம் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில், அ.தி.மு.க சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவாக பிரிந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் அவைத்தலைவர் மதுசூதனன் பேரில்தான் இரட்டை இலைச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பின்னர், அவரின் பெயரில்தான் வழக்கு நீடித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் மூலம் பழனிசாமி அணி இனி அ.தி.மு.க என்ற பெயரைப் பயன்படுத்த முடியும். முன்னர் இந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அ.தி.மு.க. அம்மா, புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலேயே அ.தி.மு.க அணிகள் வழங்கப்பட்டுவந்தன. 

இரட்டை இலை


இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்ட அணிக்கு மக்களவையில் 34 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும், மாநில சட்டசபையில் 111 உறுப்பினர்களும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அ.தி.மு.க ஜெ.அணி, ஜானகி அணி என இரண்டாகப்பிரிந்தது. அப்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெ. அணிக்கு இரட்டை இலைச்சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்திருப்பது அ.தி.மு.க-வில் எடப்பாடி அணியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேசமயம், டி.டி.வி. தினகரன் தலைமையிலான சசிகலா அணியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!