தீவிரமாகும் 'பத்மாவதி' எதிர்ப்பு! ராஜஸ்தான் கோட்டையில் ஒருவர் தற்கொலை | Padmavadi Row: A Man Hanged Rajastan Fort

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (24/11/2017)

கடைசி தொடர்பு:17:40 (24/11/2017)

தீவிரமாகும் 'பத்மாவதி' எதிர்ப்பு! ராஜஸ்தான் கோட்டையில் ஒருவர் தற்கொலை

பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், ராஜஸ்தான் கோட்டையில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பத்மாவதி


தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்தப் படம் ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ராணி பத்மினியாகத் தீபிகா படுகோனேவும் ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜயாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இயக்குநர், நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர்கார்க் கோட்டையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய உடல் கோட்டையில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் அருகே பத்மாவதி படத்துக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இது ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மாவதி படத்துக்கும் சிக்கல் அதிகரித்துள்ளது.