உலகத் தொழில் முனைவோர் மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்புக் கெடுபிடியில் ஹைதராபாத்

உலகத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத் நகருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவான்கா

மத்திய நிதி ஆயோக் அமைச்சகத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து ’உலக தொழில்முனைவோர் மாநாடு’ நடத்தவுள்ளது. ஹைதராபாத்தில் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக அளவில் பல சர்வதேச தலைவர்களும் முன்னணி தொழில் முனைவோர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தத் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று ஹைதராபாத் வரவுள்ளது. இந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமையேற்று இந்தியா வரவுள்ளார் இவான்கா ட்ரம்ப். டொனால்ட் ட்ரம்ப்பின் மகளான இவான்கா சர்வதேச அளவில் நடைபெறும் பல வளர்ச்சி மாநாடுகளிலும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பல நிகழ்வுகளிலும் தன்னுடைய தொடர் பங்களிப்பை அளித்து வருகிறார்.

இவான்காவின் வருகையையொட்டி ஹைதராபாத் நகர் முழுவதும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஐந்து அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடிக்கு இரண்டு கண்காணிப்புக் கேமிரா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் போலீஸார், நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் போலீஸார், ஆளில்லா கண்காணிப்பு விமானம் என உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 27-ம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு தனி விமானம் மூலம் ஹைதராபாத் வருகிறார் இவான்கா.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!