பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் விடுதலை... இந்தியாவில் கொண்டாட்டம்!

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஹபீஸ் சயீத் வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை, உத்தரப்பிரதேசத்தில் சிலர் கொண்டாடியுள்ளனர். 

ஹபீஸ் சயீத்

 

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் மார்க்கமாக மும்பை நகருக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியவர் ஹபீஸ் சயீத். இவர் ஜமாத்-உத்-தவா என்னும் இயக்கத்தின் தலைவர். இந்த இயக்கத்தைச் சர்வதேசப் பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து, ஹபீஸ் சயீதை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது. பாகிஸ்தான் இதை ஏற்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பணிந்தது. கடந்த ஜனவரி மாதம் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவருடைய காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், அவற்றை நிராகரித்த பாகிஸ்தான் அரசுக் காவலை நீட்டிக்க விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இதையடுத்து ஹபீஸ் சயீதை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று அவர் வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் அதை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்கள். அவரை விடுவித்ததுக்கு இந்தியா எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லாகிம்பூர் கெரி பகுதியில் ஹபீஸ் சயீதின் விடுதலையைச் சிலர் கொண்டாடியதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. வீடுகளில் பச்சைக்கொடி ஏற்றி வைத்து அவர்கள், ஹபீஸ் சயீத் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதேபோல், பேகம் பா பகுதியிலும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹபீஸ் சயீதின் விடுதலையைக் கொண்டாடியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!