மிரட்டல்களை ஏற்றுக்கொள்ள முடியாது! - `பத்மாவதி' விவகாரத்தில் வெங்கைய நாயுடு கண்டிப்பு

வன்முறை மிரட்டல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பத்மாவதி விவகாரம் குறித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு கூறினார்.

வெங்கையா


தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்தி திரைப்படம் பத்மாவதி. ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ராணி பத்மினியாகத் தீபிகா படுகோனேவும் ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜயாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி , நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு பத்மாவதி பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். வெங்கைய நாயுடு பேசும்போது, “திரைப்படங்களில் தங்கள் மத மற்றும் சமூக உணர்வை புண்படுத்தியதாகக் கூறி குறிப்பிட்ட சில மக்கள் போராட்டம் நடத்துவது இப்போது ஒரு பிரச்னையாக உள்ளது. போராட்டம் நடத்துவதோடு நில்லாமல் சிலர், தலைக்கு விலை அறிவிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதுபோன்றவர்களிடம் அவர்கள் அறிவிக்கும் அளவுக்கான பணம் இருக்குமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன. ஜனநாயகத்தில் இதுபோன்ற மிரட்டல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!