வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (26/11/2017)

கடைசி தொடர்பு:19:40 (26/11/2017)

`உலக நாடுகள் பாகிஸ்தானை நிராகரிக்கும்..!' - ஹபீஸ் சயீத்தின் விடுதலையையடுத்து கொதிக்கும் ஜெட்லி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் சயீத். அவரை அந்நாட்டு அரசு வீட்டுக்காவலில் இருந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் விடுவித்தது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

அருண் ஜெட்லி

ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டது குறித்து அருண் ஜெட்லி கூறுகையில், `மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு நாள் இன்று. இந்நிலையில், இதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதைப் போன்று தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்ற நாடுகள் ஒன்றாக நிற்கும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை உலக நாடுகள் நிராகரிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.