வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (27/11/2017)

கடைசி தொடர்பு:07:15 (27/11/2017)

போப் ஆண்டவர் மியான்மரில் சுற்றுப்பயணம்... இந்தியா வருவாரா?

போப் ஆண்டவர் இந்தியாவுக்கு வரவேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று இந்திய கத்தோலிக்கப் பேராயர்கள் கூட்டமைப்பு புகார் கூறியுள்ளது. 

போப்கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் குருவாகக் கருதப்படுபவர் போப் ஆண்டவர் பிரான்ஸிஸ். அவரே கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு முதன்மை மதபோதகராகவும் உள்ளார். போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் மியான்மர் சென்றார். மியான்மர் தலைவர் ஆன் சாங் சூகியிடம் ரோகிங்யா முஸ்லிம்கள் பிரச்னைகுறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார் டாம் ஏமனில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியிருந்தார். சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய விடுதலைக்குப் போப் ஆண்டவர் பிரான்ஸிஸின் முயற்சிகள் காரணம் ஆகும். ஆகவே, தெற்காசிய நாடுகள் பயணத்தின்போது போப் ஆண்டவர் இந்தியாவுக்கும் வர அவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கத்தோலிக்கப் பேராயர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் வருத்தத்துடன் கூறினார். இதுபற்றி விளக்கம் கேட்க மத்திய வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டபோது, உரிய பதில் கிடைக்கவில்லை.