மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், போக்குவரத்துக்கழத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என்று கோரி கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதியிலிருந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை. இவ்விவகாரத்தில் பிரச்னைக்குத் தீர்வுகாண தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான சம்பள உயர்வையும் அரசு அறிவித்தது. ஆனால் அது மட்டும் போதாது என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டு மூன்று பேர்கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

அந்த கமிட்டி சமீபத்தில் தனது அறிக்கையை நீதிமன்றதில் தாக்கல் செய்தது. அந்த கமிட்டியும், `அரசுப் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வாய்ப்பு இல்லை’ என்று தெரிவித்திருந்தது. கமிட்டி தெரிவித்திருந்த மற்ற அனைத்துப் பரிந்துரைகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வரும் 22-ம் தேதிக்குள் ஊழியர்கள் அனைவரும் பணியில் சேர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மும்பை ஆசாத் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை போலீஸார் கடந்த 8-ம் தேதி அங்கிருந்து விரட்டினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனே அவர்கள் நேராக தென்மும்பையிலுள்ள சரத் பவார் வீட்டுக்குச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சரத் பவார் இல்லத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அவர்கள் கற்கள் மற்றும் செருப்பை வீசி சரத் பவார் இல்லத்தைத் தாக்கினர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே போராட்டத்தைக் கைவிடும்படி தொழிலாளர்களிடம் கைகூப்பி கேட்டுக்கொண்டும் அவர்கள் கைவிடவில்லை. இதற்கிடையே சரத் பவார் வீட்டை நோக்கிச் சிலர் செருப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 109 தொழிலாளர்களைக் கைதுசெய்துள்ளனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர சரத் பவார் போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்ற கோபத்தில் தொழிலாளர்கள் இது போன்று நடந்துகொண்டனர்.

சரத் பவார் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அமைச்சர் அனில் பரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனில் பரப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``சரத் பவார் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களை மீண்டும் பணிக்கு எடுப்பது சாத்தியம் இல்லை. அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தற்போது போலீஸார், எப்படி ஊழியர்கள் சரத் பவார் இல்லத்துக்குச் சென்றனர். அவர்களை யார் தூண்டிவிட்டு அழைத்துச் சென்றனர் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர். நீதிமன்ற உத்தரவிட்டபடி ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.