வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (27/11/2017)

கடைசி தொடர்பு:14:10 (27/11/2017)

குஜராத் தேர்தல் களத்தில் திருப்பம்: தனித்துப் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி

குஜராத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக, தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி

ஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப்போவது நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய மூன்று பேர் அல்ல. ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி எனும் இந்தியா முழுக்க அதிகம் அறியப்படாத மூன்று பேர்தான்.

இதில், பா.ஜ.க-வை தோற்கடிப்பது மட்டும்தான் ஒரே குறிக்கோள் என களம் இறங்கியவர் ஜிக்னேஷ் மேவானி. சில நாள்களுக்கு முன்னர் ‘கூட்டணிக்கு அழைப்பது காங்கிரஸாகவே இருந்தாலும் கூட்டணி சேர மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார் ஜிக்னேஷ் மேவானி. இந்நிலையில் தற்போது, ஜிக்னேஷ் மேவானி தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “நண்பர்களே, குஜராத் பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம்-11 தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறேன். நாம் போராடுவோம், வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.