வெளியிடப்பட்ட நேரம்: 01:43 (28/11/2017)

கடைசி தொடர்பு:08:03 (28/11/2017)

''ஶ்ரீநகர் லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள்..!''  பா.ஜ.க-வுக்கு பரூக் அப்துல்லா சவால்

காஷ்மீர் விவகாரம் மீண்டும் இப்போது சூடுபிடிக்கத்தொடங்கி இருக்கிறது. பிரிவினைவாத தலைவர்கள் மட்டுமின்றி மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான பரூக் அப்துல்லா-வின் சமீபத்திய பேச்சுகள் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசை அவர் கடுமையாக சாடி இருக்கிறார்.

பரூக்

 

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவராக இருக்கும் பரூக் அப்துல்லா, ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றுவோம்; மூவர்ணக்கொடியை பறக்க விடுவோம் என்று சில தலைவர்கள் பேசி வருகிறார்கள். அதற்கு முன்னதாக ஶ்ரீநகரின் இதயப்பகுதியாக இருக்கும் லால் சவுக் பகுதியில் மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள் பார்க்கலாம்? அவர்களால் அங்கேயே கொடியை ஏற்ற முடியாது. ஆனால், அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசி பிரச்னையை திசை திருப்புகிறார்கள்.

பணமதிப்பிழப்பு செய்துவிட்டால் நாட்டில் அமைதி கிடைத்து விடுமா? எல்லையில் மக்களைக் காக்க நமது ராணுவ வீரர்கள் போராடுகிறார்கள். மக்களும் அவதிக்குள்ளாகிறார்கள். பாகிஸ்தான் என்று பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்ற வேண்டாம். பாகிஸ்தானை விட நாம் பலமடங்கு சக்தியுடன் இருக்கிறோம். மக்களுக்கு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று மத்திய அரசு என்று யோசிக்க வேண்டும். நாட்டுக்காக உழைப்பவர்களைக் குறை சொல்லக்கூடாது. நாங்கள் இந்திய தேசத்துக்காக பணியாற்றவில்லையா? நாட்டு மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும்'' என்று பேசியுள்ளார்.

முன்னாள் முதல் மந்திரியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார் என்று பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநில துணை முதல்வரும் பா.ஜ.க தலைவருமான நிர்மல் சிங் பேசுகையில், ''எந்தெந்த பிரச்னைகளில் அரசியல் பேச வேண்டும் என்பது மூத்த தலைவருக்கு தெரியாமல் போய்விட்டது. இது அவரது வழக்கமான பேச்சுதான். ஆனாலும், அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். காஷ்மீர் மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தேசியக் கொடி ஏற்றுவோம். இந்தியாவின் மூவர்ணக்கொடியை ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. தேசியக் கொடியை ஏற்றும் வலிமை மத்திய அரசுக்கு உள்ளது'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க