வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (28/11/2017)

கடைசி தொடர்பு:20:07 (28/11/2017)

இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப்பும் ... ஐந்து சம்பவங்களும்!

இவான்கா

ஹைதராபாத்தில் உலக தொழில்முனைவோர் மாநாடு இன்று துவங்குகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகளும், ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். இவருக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் இருநாட்டு உறவுகள் பலப்படும், தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் நிதிதேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இவான்கா வருகையை ஒட்டி பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. 

அகற்றப்பட்ட பிச்சைக்காரர்கள்:

GES 2017

அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப் மகள் வருவதை ஒட்டி ஒருவாரத்துக்கு முன்பிலிருந்தே ஹைதராபாத் முழுவதும் இருந்த சாலையோர பிச்சைக்காரர்கள் 200க்கும் அதிகமானவர்களை சிறைச்சாலை மைதானங்களில் ஒருங்கிணைத்து ஆண், பெண் பிச்சைக்காரர்கள் தனியாக பிரிக்கப்பட்டு ஆனந்த் ஆஷ்ரமம் என்ற இடத்தில் அவர்கள் குளித்து உடைமாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது பிச்சைக்காரர்களற்ற நகராக உருவாக்கும் திட்டம் என்று முதலில் சொல்லப்பட்டாலும், உலக தொழில்முனைவோர் மாநாடு, உலக தெலுங்கு கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புதிய சாலைகள், மூடப்பட்ட சாக்கடைகள்:

GES 2017

இதன் அடுத்தகட்டமாக மொத்த ஹைதராபாத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய சாலைகள் போடப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டன. மூடாமல் இருக்கும் சாக்கடைகள் மூடப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்துமே ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டவை. இவற்றை இந்திய அரசோ அல்லது ஆந்திர, தெலங்கானா அரசோ கவனித்ததைவிட அமெரிக்க தூதரகம் அதிகமாகவே கவனித்துள்ளது. ஏனெனில் ட்ரம்ப்பின் இந்தியப் பயணத்துக்கு இவான்கா பயணம்தான் முன்னோட்டம் என்பதுதான் மாஸ்டர் ப்ளானாம்.

அனுமதி மறுக்கப்பட்ட ஆந்திரா:

முதலில் இந்த மாநாட்டை நடத்த ஆந்திர அரசுதான் அனுமதி கோரியிருந்தது. ஆனால், சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசின் கோரிக்கையான அமராவதி அல்லது விசாகப்பட்டினத்தில் நடத்த வேண்டும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்து ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்தனர். இந்த நகரங்களை ஆந்திராவின் நகர கட்டமைப்பை பிரபலப்படுத்தும் நோக்கில் பரிந்துரைத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டதில் ஆந்திரா வருத்தத்தில் உள்ளது. ஆனாலும், இந்த மாநாட்டின் முடிவில் ஆந்திராவுக்கு நிறைய அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் வரவுள்ளது பாசிட்டிவ் நோட்.

ட்ரம்ப் vs மோடி:

"டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையும், மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கையும் மாறுபட்டுள்ளதே" என்ற கேள்விக்கு "இரண்டும் கொள்கை ரீதியாக மாறுபட்டவை. ஆனால், அது எந்தவிதத்திலும் மோடி - ட்ரம்ப் உறவைப் பாதிக்காது. இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்" என்று கூறி ட்ரம்ப் - மோடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ட்ரம்ப் மகள்!

GES 2017

 

ஃபலுக்னாமா அரண்மனை டின்னர்:

1893-ம் ஆண்டு கட்டப்பட்ட ஃபலுக்னாமா அரண்மனையில்தான் மோடி - இவான்கா சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த அரண்மனையை 10 ஆண்டுகளாக தாஜ் ஹோட்டல் நிர்வகித்துவருகிறது. இந்த ஹோட்டலில் உள்ள தேள் வடிவிலான 101 பேர் அமர்ந்து உணவு அருந்தும் டைனிங் ஹாலில்தான் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. பிரதமர் மோடி - இவான்கா உடன் அமர்ந்து உணவு சாப்பிடவிருக்கும் 101 பேர் யார் என்ற விவரங்கள் பெறப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

இப்படி பல செய்திகளை தாங்கி நடந்துகொண்டிருக்கும் இந்த உலக தொழில்முனைவோர் மாநாட்டில் பங்குகொள்ளும் தொழில்முனைவோர்களில் 52% பேர் பெண்கள் எனும் பெருமிதமாக ட்விட் செய்துள்ளார் இவான்கா. ஒரு மாநாட்டுக்காக இவ்வளவு ஏற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுக்கும் மத்திய, மாநில அரசுகள் ஏன் மற்ற நேரங்களில் எடுக்கத் தவறுகிறது என்ற கேள்விக்கு அரசின் பதில் மெளனமாகவே உள்ளது. பல சாதகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ள இந்த மாநாட்டின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இவான்கா பயணத்தில் இன்னும் சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கலாம். 


டிரெண்டிங் @ விகடன்