வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (28/11/2017)

கடைசி தொடர்பு:14:30 (28/11/2017)

`பத்மாவதி'-க்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் கறார்!

இந்தித் திரைப்படமான `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதைப் போன்ற ஒரு வழக்கை நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடிசெய்திருந்த நிலையில், மறுபடியும் 'பத்மாவதி' திரைப்படத்துக்கு தடை கோரி வழக்குப் போடப்பட்டது.

பத்மாவதி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவுத் திரைப்படம், 'பத்மாவதி.' ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜபுத்திர சமூக மக்கள், `பத்மாவதி'க்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு, படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. 'பத்மாவதி' திரைப்படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பத்மாவதி படத்தின் ரிலீஸைத் தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 (Viacom18) அறிவித்துள்ளது. இதையொட்டி, பத்மாவதிக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், `தணிக்கை வாரியம் இன்னும் 'பத்மாவதி' திரைபடத்துக்கு சான்றிதழ் கொடுக்கவில்லை. இந்நிலையில், அரசுப் பதவியில் இருப்பவர்கள், தணிக்கை வாரியம் இந்தப் படத்துக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? இது, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிடுவது போன்றது' என்று கூறி வழக்கைத் தள்ளுபடிசெய்தது.