வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (28/11/2017)

கடைசி தொடர்பு:16:24 (28/11/2017)

'நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தைக் கையிலெடுக்கத் துடிக்கும் மோடி அரசு!’

மோடி நீதிபதி

'தேசிய சட்ட நாள்' நிறைவு நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (26-11-2017) டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு தற்போதைய 'கலேஜியம்' முறைக்குப் பதிலாக, மோடி அரசு உருவாக்கிய மாற்று அமைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை பிரசாத் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ''பி.ஜே.பி அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் உருவாக்கிய 'நீதித்துறைப் பணிகளுக்கான தேசியத் தேர்வாணையம்' என்கிற அந்த மாற்றின் மீதும், சட்ட அமைச்சர் மற்றும் பிரதமர் மீதும் நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லையா...'' என்கிற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள கலேஜியம் முறையில், அரசியல் தலையீடு இல்லாமல் நீதித்துறையே நீதிபதிகளைத் தேர்வு செய்கிறது. பி.ஜே.பி அரசு, பதவி ஏற்றவுடன் இயற்றிய மேற்கூறிய தேர்வாணையச் சட்டம் நீதிபதிகளின் தேர்வில் அரசுக்குக் கூடுதல் பங்கை அளித்தது. அன்றைய தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட ஓர் அரசியல் சட்ட அமர்வு அந்தச் சட்டத்தைக் கடந்த 17-10- 2017 அன்று ரத்து செய்தது. 'நீதிபதிகளின் தேர்வை அமைச்சு அதிகார வர்க்கத்துடன் பகிர்ந்துகொள்வது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல. நீதிமன்றம் ஆட்சி அதிகாரத்திலிருந்து முற்றிலும் சுதந்திரமாக இயங்கக்கூடியதாக இருக்கும் வரைதான் குடிமக்களின் உரிமைகளை அது காக்கக் கூடியதாக இருக்கும்' என அத்தீர்ப்பில் கூறப்பட்டது. 

இதன் விளைவாக மோடி அரசால் அதைச் செயற்படுத்த இயலாமற் போனது. எனினும் இப்படி ஆனதை ஒரு ஜனநாயக நடைமுறையாகப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள மோடி அரசு தயாராக இல்லை. தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வன்மமாக இதைச் சுட்டிக்காட்டுவது என்பது அரசின் வழக்கமாகியுள்ளது. கடந்த 23-3-2017 அன்று நாடாளுமன்றத்தில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசும்போதுகூட, "அணுகுண்டுத் தாக்குதலுக்கான இறுதி முடிவை எடுக்கும் உரிமையைக்கூட பிரதமருக்கு வழங்கும்போது சிறந்த மனிதர்களை நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவருக்குத் தரக் கூடாதா?" என்றார்.

இப்போது 'பிரதமர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோரை நீதித்துறை  நம்பவில்லையா...' எனக் கேட்கிறார். 'தேர்வுக் குழுவில், சட்ட அமைச்சரின் இருப்பை சந்தேகத்துக்குரியதாக ஏன் நினைக்கிறீர்கள்...' எனவும் கேட்டுள்ளார். 'தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணனை நீங்கள்தானே தேர்வு செய்தீர்கள். உங்கள் தேர்வு மட்டும் தவறுகளுக்கு அப்பாற்பட்டதா' - என்றெல்லாம் ரவி சங்கர் பிரசாத் நீதித்துறையை நோக்கித் தன் கேள்விகளை அடுக்கியுள்ளார். 

மோடி

பிரச்னை பிரதமர், சட்ட அமைச்சர் ஆகியோர் நம்பிக்கைக்கு உரியவர்களா இல்லையா என்பதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற ஒரே காரணத்துக்காக பிரதமரையும், அமைச்சரையும் நம்பியே ஆக வேண்டும் என்றால், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்கள் எல்லாமே சட்டப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில், எல்லாவற்றுக்கும் மேலானது அரசியல் சட்டம்தான். நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் எந்தச் சட்டமும் அரசியல் சட்டத்தின் வெளிச்சத்தில் சோதிக்கப்படக் கூடியவையே. வேண்டுமானால், அரசியல் சட்டத்தையே உரிய விதிமுறைகளின்படி மாற்றி அமைக்கலாமே ஒழிய, அரசியல் சட்டத்தின் இந்த முதன்மையை ஒரு ஜனநாயக அமைப்பில் மறுத்துவிட முடியாது. அப்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யும்போதுகூட, அந்தத் திருத்தம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளுக்கு முரணாக இருக்கக் கூடாது என்பதுதான் கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பின் மூலம் மேலுக்கு வந்துள்ள நியதி. 

'நீதிபதி கர்ணன் தேர்வில் தவறு நடந்துவிட்டது' என்கிற அடிப்படையில், 'கலேஜியம் முறை தவறுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல' என்கிறார் சட்ட அமைச்சர். கலேஜியம் முறை தவறுகளுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதிலும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், அதற்காக கலேஜியம் முறையை ஒழித்துவிட்டு அதிகாரத்தை அமைச்சரவையிடம் அளிப்பதை ஏற்கமுடியாது. சட்ட அமைச்சரின் 'லாஜிக்' படி பார்த்தாலும் அமைச்சரவைத் தேர்வும் தவறுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. மத்திய, மாநில அமைச்சர்கள் எல்லாம் பிரதமர் மற்றும் முதல்வரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள்தான். ஆனால், எத்தனை அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை செல்ல நேர்ந்துள்ளது... பிறகு பிரதமரின் தேர்வு மட்டும் எப்படிச் சந்தேகத்துக்கும் தவறுகளுக்கும் அப்பாற்பட்டதாக ஆகும்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற காரணத்துக்காக பிரதமரை நம்ப வேண்டும் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட அப்படி என்ன பிரதமரும், சட்ட அமைச்சரும் நூறு விழுக்காடு மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா. 35 விழுக்காடு வாக்குகள் பெற்றாலே இந்திய ஜனநாயக அமைப்பில், ஒருவர் பிரதமர் ஆகிவிட முடியும். அப்படியானால், 65 விழுக்காடு மக்கள் அவரை ஏற்கவில்லை என்றுதானே பொருள்?

இன்றைய அரசுக்குப் பிடிக்காத இன்னொரு நீதிமன்றச் செயல்பாடு இந்தப் 'பொதுநல வழக்குகள்'. அண்மையில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "நீதிபதிகள், அமைச்சரவையின் அதிகார எல்லைக்குள் நுழையக் கூடாது. அவர்கள் தீர்ப்பு எழுதுவதற்கு மட்டுமே பயிற்சி பெற்றவர்கள். நிர்வாகச் செயல்பாடுகளுக்கோ, இல்லை விளையாட்டு நிறுவனங்களை இயக்குவதற்கோ அவர்களுக்குத் தகுதி கிடையாது" என்று கூறியுள்ளார். அதாவது பொதுநல வழக்குகள் மூலம் சமூகப் போராளிகள் சில பொதுவான பிரச்னைகளைக் கையில் எடுத்து அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடுகின்றனர். பல வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் இப்படிப் பொதுநல வழக்குகளின் ஊடாகச் சமீப காலங்களில் நடந்தேறியுள்ளன. இதற்கு உதாரணமாக, கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் ஆகியவற்றைச் சொல்லலாம். 

கிருஷ்ணய்யர்பொதுநல வழக்கு என்பது 1980-களில் நீதிபதிகள் பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ண அய்யர் ஆகியோரால் மேலுக்கு வந்த ஒரு நீதிநெறி நடைமுறை. எந்த ஒரு பிரச்னை மீதும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி சமூக அக்கறையுள்ள குடிமக்கள் யாரும் நீதிமன்றத்தை இயக்கி நீதியை நிலைநாட்டக் கிடைத்த பெரு வாய்ப்பு அது. ஒரு சாதாரணக் குடிமகன் கூட ஒரு தபால் அட்டையில் எழுதி நீதி பெற இயலுவதை சாத்தியமாக்கிய ஒன்று இது. இதன்மூலம் சாதாரண மக்களும் அதிகாரப்படுத்தப்பட்டனர். 

இன்றைய அரசின் கண்ணை உறுத்தும் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று. மோடி அரசு பதவியேற்ற பின் 'முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கான மாநாடு' (5-4- 2015) டெல்லியில் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஐந்து நட்சத்திரப் போராளி'களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்களை அறிவுறுத்தினார். அப்படி அவர் கிண்டலடித்தது வேறுயாரையும் அல்ல. பொதுப் பிரச்னைகளில் தலையிட்டு நீதி கோருகிறவர்களைத்தான். 

'தேசிய சட்ட நாள்' நிகழ்ச்சியில் பதிலளித்துப் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'பிரதமர் மீது அரசியல் சட்டம் பொதிந்துள்ள நம்பிக்கையைத் தாங்களும் கைக்கொள்வதாக'க் குறிப்பிட்டுள்ளார். பொருத்தமற்ற பொதுநல வழக்குகள் பலவற்றைத் தாங்கள் நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது எனப் புறக்கணித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சட்ட அமைச்சர்களிடமிருந்து வரும் பரிந்துரைகள் எல்லாவற்றையும் கலேஜியம் மிக்க கவனத்துடன் பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.   

இன்றைய அரசு, அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடம், அதுவும் குறிப்பாக பிரதமரிடம் குவித்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. சுதந்திரமாக இயங்கும் நீதிமன்ற அமைப்பினை, அதன் கண்ணை உறுத்தும் தொந்தரவாகக் கருதுகிறது. அதன் வெளிப்பாடுதான் பிரதமர் மோடியின் முன்னிலையில் நீதித்துறையின் மீது சட்ட அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சாடல். ஜனநாயக நெறிமுறைகள், சட்ட வழமைகள் ஆகியவற்றை அளக்கவும் புறந்தள்ளவும் அவற்றுக்கு அப்பாற்பட்ட 'நம்பிக்கை' என்கிற அளவுகோல் பயன்படாது. 'நம்பிக்கை' என்பதை முன்வைத்து நெறிமுறைகளை மீறுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. ஒரு வேளை எதன்மீதாவது நம்பிக்கை வைத்தே ஆக வேண்டும் என்றால், அது அரசியல் சட்டத்தின் மீது மட்டுமே இருக்க முடியும். பிரதமர் அல்லது அமைச்சரை உரைகல்லாகக் கொள்ள முடியாது!

கலேஜியம் முறையில் திருத்தங்கள் வேண்டும் என்பதில் நீதிமன்றம் உட்பட யாருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், அதன் பொருள் கலேஜியத்தை பிரதமரின் அதிகாரத்தால் மாற்றீடு செய்வதல்ல!