`பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா?' - ப.சிதம்பரம் சாடல்

குஜராத் தேர்தலுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, `காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது குஜராத்தை வஞ்சித்தது' என்று கூறினார். இதற்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.  

ப.சிதம்பரம்


இதுகுறித்து ப.சிதம்பரம் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `திரு.மோடியின் பிரசாரங்கள் அவரைப் பற்றியதாகவும் அவரின் கடந்த காலத்தைப் பற்றியதாகவும், குஜராத் மற்றும் குஜராத்திகள் வஞ்சிக்கப்பட்டதாகவும் என இதைப்பற்றித்தான் இருக்கிறது. அவர், இந்தியாவின் பிரதமர் என்பதை மறந்துவிட்டாரா? ஏன், வேலையின்மை பற்றியும், முதலீடுகளில் இருக்கும் சுணக்கம் பற்றியும், சிறு மற்றும் குறு தொழில் நிறவனங்களின் சிதைவு பற்றியும், ஏற்றுமதியில் இருக்கும் தொய்வு பற்றியும், விலை உயர்வு பற்றியும் பேச மறுக்கிறார். இந்த உண்மைகள்குறித்து அவரிடம் எந்தப் பதிலும் இல்லை. குஜராத் தேர்தல் என்பது மோடி என்ற தனி மனிதனைப் பற்றியதல்ல. 42 மாதங்கள் கழித்தும் அவர் கூறிய `அச்சே தின்' வரவில்லை என்பதைப் பற்றியதுதான் அந்தத் தேர்தல். காந்திஜி ஒரு இந்தியர் என்பதையும் குஜராத்தின் மகன் என்பதையும் மோடி மறந்துவிட்டார். காந்தி, தேசத்தின் தந்தை என்பதை மோடி தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கு காந்தி பயன்படுத்திக்கொண்டது காங்கிரஸ் கட்சியைத்தான். பிரதமரும் பா.ஜ.க-வும் சர்தார் வல்லபாய் படேலை இப்போது அரவணைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர் பா.ஜ.க-வின் பெற்றோரான ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தத்தை நிராகரித்தார்' என்று கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!