வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (28/11/2017)

கடைசி தொடர்பு:17:25 (28/11/2017)

ஹைதராபாத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலக்கும் 13 வயது மாணவர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-பின் மகள் இவான்கா ட்ரம்ப் பங்கேற்கும் உலகத் தொழில்முனைவோர் மாநாடு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. 

Photo Credit: Twitter/GES2017


இந்த மாநாட்டில், உலகின் 127 நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹமிஷ் பின்லாய்சன் என்ற 13 வயது பள்ளி மாணவர் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் இளம் வயது தொழில் முனைவோராக அவர் அறியப்படுகிறார். குயின்ஸ்லாந்தில் 7-ம் வகுப்பு படித்துவரும் பின்லாய்சன், ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களின் தினசரி வாழ்வுக்குப் பயன்படும் வகையிலான மொபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார். 

Photo Credit: Twitter/Suganth

சூழல் பாதுகாப்பில் ஆர்வம்கொண்டுள்ள அவர், அதற்காக இதுவரை 4 மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளார். கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழலைப் பாதுகாக்கவேண்டிதன் அவசியம் மற்றும் விழிப்புஉணர்வுக்காக ’LitterbugSmash’ - என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியபோது, ஹமிஷ் பின்லாய்ஷனுக்கு வயது 10. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டிமூலம் கல்வி கற்பதற்கான ஒரு மொபைல் ஆப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இது, அவரது கைவண்ணத்தில் உருவாகிவரும் 6-வது மொபைல் அப்ளிகேஷன் ஆகும். ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு, பின்லாய்சன் கலந்துகொள்ளும் இரண்டாவது தொழில்முனைவோர் மாநாடு ஆகும். கடந்த 2016-ல், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார். 

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதுகுறித்துப் பேசிய பின்லாய்சன், ‘விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்து அறிந்துகொள்வதற்காகவும், அதுகுறித்து விவாதிப்பதற்காகவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தியாவுக்கு வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவைப் பற்றியும், இங்குள்ள சூழல்குறித்தும் அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கிறது’ என்றார்.