வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (28/11/2017)

கடைசி தொடர்பு:20:45 (28/11/2017)

`இந்தியா உலகுக்கே முன்னுதாரணம்!' - இவான்கா ட்ரம்ப் புகழாரம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் பங்கேற்கும் உலகத் தொழில்முனைவோர் மாநாடு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இவான்கா, இந்தியா உண்மையில் உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

இவான்கா

இது குறித்து இவான்கா, `இந்தியா உலகத்துக்கே ஒரு முன்னுதாரணம். உங்கள் திறமையின் மூலமும் தொழில்முனையும் சிறப்பினாலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். உங்கள் சொந்த நிறுவனங்களாலும் தொழில் முனையும் திறனாலும் கடின உழைப்பாலும் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இது அசாத்திய வளர்ச்சி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த முன்னேற்றம் தொடர்ச்சியாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக, இங்கு இருக்கும் பெண் தொழில்முனைவோர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். பெண் தொழில்முனைவோர்களுக்கு நிதி, மூலதனம், சமமான சட்டங்கள் என அனைத்தும் இருக்கும்படி செய்ய வேண்டும். எப்போது, பெண்கள் முன்னேற்றப்படுகிறார்களோ அப்போதுதான் நமது குடும்பம், நமது பொருளாதாரம் மற்றும் நமது சமூகம் அதன் முழு வீச்சை அடையும்' என்று பேசினார்.