வெளியிடப்பட்ட நேரம்: 06:25 (29/11/2017)

கடைசி தொடர்பு:07:28 (29/11/2017)

'வறுமையால் பிச்சையெடுப்பது குற்றமல்ல..!'- சர்ச்சையைக் கிளப்பும் மத்திய அரசின் வாதம்

'வறுமையின் காரணத்தால் ஒருவர் பிச்சையெடுப்பது குற்றமாகாது' என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

பிச்சை

 

பிச்சைக்காரர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு அடிப்படை உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்கூடிய இரு மனுக்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இதுபற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். 

இதற்கு, மத்திய அரசு நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல்செய்தது. அதில், “வறுமை காரணமாக ஒருவர் பிச்சையெடுப்பது குற்றம் அல்ல. ஒருவர் தாமாக விரும்பி பிச்சையெடுத்தாலோ, கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கப்பட்டாலோ, அது கட்டாயம் கைது நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட வேண்டியது. நம் நாட்டில் 20 மாநிலங்களும், 2 யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கென பிச்சையெடுத்தல் தடுப்புச்சட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்திவருகின்றன. அந்தச் சட்டங்களில், மாநில அரசுகள்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். எனவே, இந்த மனுக்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த வாதத்தைக் கேட்ட  நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். “யாரேனும் சொந்த விருப்பத்திலோ அல்லது கட்டாயத்திலோ பிச்சை எடுப்பார்களா? அப்படி யாரையேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் எதிர்க் கேள்வி எழுப்பினார்கள். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இந்த மனுக்கள்மீதான அடுத்தகட்ட விசாரணை வருகிற ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வாதம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.