வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (29/11/2017)

கடைசி தொடர்பு:12:56 (29/11/2017)

``நேர்மையை மட்டும் கைவிடாமல் இருந்தால் போதும்"- உ.பி-யைக் கலக்கும் தருமபுரி சிங்கம்! #VikatanExclusive

'லோக்கல் தாதாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் உச்சகட்ட அரசியல்வாதி வரை முனிராஜ் ஐ.பி.எஸ் என்ற பெயரைக் கேட்டால் எழுந்து நிற்பர். உத்தரப்பிரதேசத்தின் ஒரிஜினல் சிங்கம் முனிராஜ் ஐ.பி.எஸ்’. இப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்த பத்திரிகைகளும் நம்ம ஊர் முனிராஜை பாராட்டுகிறார்கள்.

முனிராஜ்

நள்ளிரவு 12 மணி. சாதாரண டி-ஷர்ட், ட்ராக் பேன்ட்ஸ் என வலம் வந்துகொண்டிருந்தவர், திடீரென அத்துமீறும் வாகனங்களை மடக்கிப் பிடிக்கிறார். சட்டத்துக்குப் புறம்பான அத்தனை நிகழ்வுகளையும் கண்டறிந்து, கையும் களவுமாக கைதுப் படலத்தை அரங்கேற்றுகிறார். எந்தவொரு அதிரடிப் படையும் இல்லாமல் ‘ஒன் மேன் ஆர்மி’ -யாக இப்படிக் கலக்குபவர்தான், நம் தருமபுரி சிங்கம் முனிராஜ் ஐ.பி.எஸ்.

தருமபுரி மாவட்டத்தில், பாப்பாரப்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் முனிராஜ். அந்தக் கிராமத்திலேயே உள்ள அரசுப் பள்ளியில் தன் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை விவசாயப் படிப்பை முடித்தார். பின்னர், விவசாயத்தில் முதுகலைப் படிப்பை ஹரியானாவில் முடித்தார். சிவில் சர்வீசஸ் தேர்வுகள்குறித்த தனது தேடலைத் தொடங்கி, அதில் பயணிக்கத் தொடங்கினார். 

2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வாகி, தொடர்ந்து வடமாநிலங்களிலேயே பணியாற்றி வந்த முனிராஜ் ஐ.பி.எஸ், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் எஸ்.எஸ்.பி ஆகப் பணியாற்றிவருகிறார். உ.பி-யே தூக்கிக்கொண்டாடும் இந்த சிங்கத்திடம் பேசியபோது, புன்முறுவலுடன் பதிலளிக்கத் தொடங்குகிறார். “பிறந்து வளர்ந்தது எல்லாமே தருமபுரி தாங்க. ஐ.பி.எஸ் பாஸ் ஆனதும் வடமாநிலம் பக்கம் போஸ்டிங் கிடைச்சது. ஹரியானா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பு படிச்சதால, இந்தி பழக்கமாயிடுச்சு. அதனால், பணியில் மொழிப் பிரச்னை ஏற்படல. எந்த ஊர்ல இருந்தாலும் நேர்மை மட்டும் நம்ம கைவசம் இருந்தா போதும், மக்களுக்கு எந்தத் தடையும் இல்லாம சேவையைத் தொடர முடியும். 

ஒரு போலீஸ் அதிகாரியா, தமிழகத்துக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் நிறைய வித்தியாசத்தைப் பார்க்க முடியும். தமிழகத்தோட ஒப்பிட்டுப் பார்த்தா, உ.பி-யில் சட்டம்- ஒழுங்குப் பிரச்னை, குற்றங்கள் எல்லாமே அதிகப்படியாவே நடக்கும். ஒரு சின்ன விஷயம்கூட மதக் கலவரமா மாறுவதற்கான வாய்ப்பு அதிகம். ஒரு அதிகாரியா மக்களிடமும் சரி, அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என எல்லாரிடமும் ஒரே அணுகுமுறைதான். மக்கள் ஒரு புகார்னு வந்தா, நேரா என்கிட்டதான் வருவாங்க. லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போகாம, நேரா கமிஷனர் அலுவலகம் வந்து என்னைப் பார்த்திடுவாங்க. மக்கள் எளிதா வந்து சந்திக்கும் அளவு நாம இருந்தாத்தான் பிரச்னைகள் குறையும். இந்த மாதிரி ஒரு அதிகாரி இருக்கான்னு தெரிஞ்சா போதும், மக்கள் நம்மள அதிகப்படியாவே மதிக்கத் தொடங்கிடுவாங்க. 

இங்க லோக்கல் பத்திரிகை எல்லாம் அளவுக்கு அதிகமாகவே புகழுவாங்க. அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. மக்களுக்கு நேர்மையா சேவை செய்றோம். இதுக்கு எதுக்குங்க நமக்கு விளம்பரம்” என அடக்கமாகவே பேசுகிறார், இந்த உ.பி சிங்கம் முனிராஜ் ஐ.பி.எஸ்.