வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (29/11/2017)

கடைசி தொடர்பு:20:08 (29/11/2017)

கேரள முதல்வர் பினராயி விஜயன் சபரிமலை சந்நிதானத்துக்கு திடீர் விசிட்!

`சபரிமலை சந்நிதானத்துக்குச் சென்ற முதல் கம்யூனிஸ்ட் தலைவர்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

கேரள முதல்வரின் சபரிமலை பயணம்

Pic Courtesy: Malayala Manorama

கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்றதும், 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் சபரிமலைக்கு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். திட்டமிட்ட தேதியில் மழை வெளுத்துவாங்க, கடைசி நேரத்தில் அவரின் பயணம் ரத்துசெய்யப்பட்டது. சபரிமலையில் மகரஜோதி காலம் தொடங்கிவிட்டதாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நேரம் என்பதாலும், இந்த ஆண்டு சபரிமலையில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு நடத்த முதல்வர்  திட்டமிட்டிருந்தார். 

தகவல் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இருந்தும் மலையாளப் பத்திரிகையாளர்கள் மோப்பம்பிடித்து பம்பையில் குவிந்துவிட்டனர். அக்டோபர் 16-ம் தேதி பம்பை வந்த பினராயி விஜயனை, தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மலை ஏறத் தயாரானார்.  காலில் சாக்ஸ், கேன்வாஸ் ஷூ அணிந்துகொண்டார். தன் டிரேட்மார்க்   வேட்டி, சட்டை மட்டும் மாறவில்லை. 

மாலை மயங்கிய நேரத்தில் குழுவினருடன் மலை ஏறத் தொடங்க,  பாதுகாப்பு அதிகாரிகளின் கைகளில் துப்பாக்கிக்குப் பதில் அரிவாள் இருந்தது. மரங்கள் ஆங்காங்கே வீழ்ந்து கிடந்ததால், அவற்றை அப்புறப்படுத்தவே அரிவாள். பினராயி விஜயனின் டீம் மலை ஏறத் தொடங்கவும்  மழைத் தூறல் விழவும் சரியாக இருந்தது. எனினும், சந்நிதானம் நோக்கிய பயணத்தை ரத்துசெய்யவில்லை. பம்பை நதி அடிவாரத்திலிருந்து சந்நிதானம் 4.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எந்த இடத்திலும் நிற்காமல் அமராமல் ஓய்வு எடுக்காமல் அசராமல் நடந்தார் 72 வயது விஜயன். வழியில் அவரைக் கடந்த பக்தர்களிடமும் நலம் விசாரித்தார். பாதையில் ஒரு பாம்பு  அவரை மறித்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அதை அப்புறப்படுத்தினர்.

மற்றபடி, வேறு எந்தத் தடையையும் சந்திக்காமல் நடந்த அவர், ஒன்றரை மணி நேரத்தில் சந்நிதானம் வந்தடைந்தார். கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்றில் சபரிமலைக் கோயிலில் சந்நிதானம் வரை சென்ற ஒரே தலைவர் பினராயி விஜயன்தான்.

``மலை ஏறும்போது, கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது. போகப் போக ஒரு தைரியம் வந்துவிட்டது. இந்த வயதில் மலை ஏறுவதுகூட சற்று வித்தியாசமான அனுபவம்தான்'' என்று தன் மலேயற்றம் பற்றி பினராயி விஜயன் சொல்லி மகிழ்ந்தார். 

சபரி மலை செல்லும் பினராயி விஜயன்

Pic Courtesy: Malayala Manorama

சந்நிதானம் சென்றடைந்த பினராயி விஜயன், கவனமாக காலில் இருந்த காலணியைக் கழற்றிக்கொண்டார். அப்போது ஐய்யப்பனுக்கு எந்தச் சிறப்பு அலங்காரமும் செய்திருக்கவில்லை. ``என்ன... சாமிக்கு அலங்காரம் ஏதும் செய்யவில்லையா?'' என அங்கு இருந்த தந்திரிகளிடம் கேட்க, ``கலாபிஷேகத்துக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறோம் சார்'' என்று தந்திரிகள் பதிலளித்தனர். 

சபரிமலையில் ஐய்யப்பன் சந்நிதானத்துக்கு வலதுபுறத்தில் மாலிக்காபுரத்தம்மாவுக்கு சிறிய ஆலயம். உள்ளது. சுவாமி ஐய்யப்பனைத் திருமணம் செய்துகொள்ள மாலிக்காபுரத்தம்மா விரும்பியதாக வரலாறு சொல்கிறது. மாலிக்காபுரத்தம்மா சந்நிதானத்தில் மஞ்சள் பிரசாதம் வழங்குவது சிறப்பு. இந்த மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டபோது, பினராயி விஜயன் இரு கரங்களை நீட்டிப்  பெற்றுகொண்டார். 

சபரிமலையில் சாதி, இனம், மொழி கடந்த அடையாளமாகத் திகழும் வாபர் நடைக்கும் பினராயி விஜயன் சென்றார். பதினெட்டாம் படிக்கு அருகில்தான் வாபர் நடை உள்ளது. அங்கு, வழங்கப்பட்ட பிரசாதத்தை ருசித்த பினராயி விஜயன், மீண்டும் ஒருமுறை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். அருகில் இருந்த செய்தியாளர்களுக்கும் பிரசாதம் வழங்குமாறு கூறினார். 

சபரிமலை கோயிலை  முழுவதுமாகச் சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்திய பினராயி விஜயன், எந்தக் களைப்பும் இல்லாமல் அதே வேகத்தில் மீண்டும் பம்பை திரும்பினார். ஆய்வின்போது, ``கறுப்பு உடை அணிவதால் மட்டும் ஒருவர் ஐய்யப்பப் பக்தராகிவிட முடியாது. வனத்தை விரும்புபவரும் அதைக் காப்பவரும்கூட ஐய்யப்பப் பக்தராக முடியும்'' என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்