வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:07:23 (30/11/2017)

இந்திரா காந்தி மூக்கைப் பொத்தியது ஏன்? மோடியின் விமர்சனத்துக்குப் பதில் கிடைத்தது

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திமீது பிரதமர் மோடி வைத்த விமர்சனத்துக்கு பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மோடி
 

குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மோர்பி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டது” என்று மோடி கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், “இந்திரா காந்தி இந்தப் பகுதிக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி தன் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். அதுசம்பந்தமான புகைப்படம் 'சித்ரலேகா' இதழில் வெளிவந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நாங்கள் அப்படியானவர்கள் அல்ல” என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்தார்.

பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு 'சித்ரலேகா' இதழே விளக்கம் அளித்துள்ளது. அதில், “1979-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியில் ஆங்காங்கே உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. அப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்டு 16-ம் தேதி இந்திரா காந்தி, மோர்பி பகுதியைப் பார்வையிட்டார். அப்போது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால்தான் அவர் முகத்தை மூடிக்கொண்டார். அந்தப் படத்தை 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி இதழில் நாங்கள் பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்” என்று 'சித்ரலேகா 'இதழ் கூறியுள்ளது.