வெறும் 1,614 பேருக்கு இடம்..! மாற்றுத்திறனாளி மாணவர்களைப் புறக்கணிக்கும் இந்தியக் கல்வி நிலையங்கள்

இந்தியாவில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகங்கள்

 

நம் நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், இதைக் கல்வி நிலையங்கள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. நம் நாட்டில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்பட புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதுகுறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தேசிய மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையம் (என்.சி.பி.இ.டி.பி) இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ஆய்வு நவம்பரில் முடிந்தது.

இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேற்குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் மொத்தம் 3.33 லட்சம் மாணவ-மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.  அவர்களில் வெறும் 1,614 பேரே மாற்றுத்திறனாளிகள். அதாவது வெறும் 0.48 சதவிகிதம். 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லும் நிலையில், அது நிறைவேற்றப்படவில்லை. அதிலும், மாணவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. 

இதுபற்றி தேசிய மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையத்தின் கௌரவ இயக்குநர் ஜாவித் அபிதி பேசும்போது, “நாட்டில் உள்ள முக்கிய 50 கல்வி நிலையங்களின் நிலை இது. எனில் மற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே கவலையாக இருக்கிறது” என்று வருத்தமாக தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!