அழிந்த நதியின் கரையில் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகம்! ஆய்வில் புதிய தகவல்

சிந்து சமவெளி நாகரிகம் அழிந்துபோன நதியின் கரையில்தான் தோன்றியிருக்கிறது என்பது புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

சிந்து சமவெளி நாகரீகம்

இந்திய வரலாற்றின் தொன்மையை பறைசாற்றுவதாய் இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் ஆகும். எகிப்து, மெசபட்டோமியா ஆகிய பழங்கால நாகரிகங்கள் தோன்றிய காலத்தில் தழைத்தோங்கியது இந்த நாகரிகம். சுமார் 5,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இது. ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் இந்த நாகரிகத்தின் அடையாளங்கள்.  காகர் -ஹக்ரா என்ற நதியின் கரைகளில்தான் சிந்துச் சமவெளி குடியிருப்புகள் அதிகம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த நதியாலேயே அந்த நாகரிகம் வளம் கொழித்திருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டுவருகிறது.

ஆனால், அது தவறு என்று இப்போதைய ஆய்வு ஒன்று கூறுகிறது. அழிந்துபோன நதியின் கரையில்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் தோன்றியதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, 8000 ஆண்டுகளுக்கு முன்பு சட்லஜ் நதி, காகர்-ஹக்ரா நதியின் தடத்தைப் பின்பற்றித் தான் ஓடியிருக்கிறது. ஆனால், குறுகிய காலத்திலேயே அது தன் தடத்தை மாற்றிக்கொண்டு விட்டது. இது நடந்து 3000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் தோன்றி உள்ளது. ஆகவே, அந்தக் காலத்தில் அங்கு இமயமலை பெருநதிகள் எதுவும் ஓடியிருக்க வாய்ப்பில்லை. அழிந்துபோன நதியின் பள்ளத்தாக்குதான் இருந்திருக்கும். அதன் கரையிலேயே நாகரிகம் தோன்றியிருக்கும். பருவகால நதி ஒன்று அப்போது அந்தப் பகுதியில் ஓடியிருக்கக் கூடும். அது நாகரிக வளர்ச்சிக்கு உதவியிருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கான்பூர் ஐ.ஐ.டி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. ஆய்வு முடிவுகள் 'நேச்சர் கம்யூனிகேஷன்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!