வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:07:30 (30/11/2017)

'பத்மாவதி' சர்ச்சையால் பதவியிழந்த பா.ஜ.க பிரமுகர்!

பத்மாவதி படக்குழுவினரின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த பா.ஜ.க பிரமுகரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

பத்மாவதி

 

தீபிகா படுகோன் முக்கிய வேடத்தில் நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்தித் திரைப்படம் பத்மாவதி. ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ராணி பத்மினியாகத் தீபிகா படுகோனும் ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜயாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநில பா.ஜ.க ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் சுராஜ் பால் அமு. பத்மாவதி படத்துக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தபோது, மீரட்டைச் சேர்ந்த இளைஞர் நடிகை தீபீகா படுகோனின் தலைக்கு ரூ.5 கோடி விலை அறிவித்தார். இதைப் பாராட்டிய அமு கூடவே, பத்மாவதி படக்குழுவினரின் தலையைக் கொய்பவர்களுக்கு தான் ரூ.10 கோடி பரிசு தருவதாக  அறிவித்தார். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், இன்று அவருடைய கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. 

பதவியை ராஜினாமா செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமு, பத்மாவதி படத்துக்கு ஹரியானாவில் தடை விதிக்காததன் மூலம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜபுத்ர சமூகத்தலைவர்களை அவமதித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், “நான் தீபிகா படுகோனைக் குறிவைத்து பரிசுத்தொகை அறிவிக்கவில்லை. அவர் இந்த தேசத்தின் மகள்” என்று அந்தர் பல்டி அடித்தார்.