இந்தியாவின் சமூக வளர்ச்சிக்கு முன்மாதிரி தமிழகம்தான், குஜராத் அல்ல!

சமூகத்தின் தேவைகள் என்னென்ன, அவை எந்தளவுக்குப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதன் மூலமே ஒரு சமூகத்தின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீட்டை Institute for Competitiveness and the Social Progress Imperative என்ற நிறுவனம் மேற்கொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

சமூக வளர்ச்சி

இந்த ஆய்வறிக்கையில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும், அதன் ஒவ்வொரு பகுதியிலும் சமூக வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டின்படி சர்வதேச அளவில் இந்தியா 93-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பட்டியலில் கேரளா (68) முதல் இடத்திலும், இமாசலப்பிரதேசம் (65) இரண்டாவது இடத்திலும், தமிழகம் (65) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

`குஜராத் மாடல்’ என்று மோடி ஆதரவாளர்கள், குஜராத்தை முன்னுறுத்தியே மற்ற மாநில அரசுகளை விமர்சிக்கின்றனர். ஆனால், மேற்கண்ட ஆய்வு முடிவு, சம அளவிலான முன்னேற்றத்திற்குத் தமிழகத்தையே முன் மாதிரியாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த அமைப்பு வேறு எந்த மாநிலத்தையும் இதுபோன்று பாராட்டவில்லை. சமூக வளர்ச்சிக்கான பட்டியலில் குஜராத் மாநிலம் 15-வது இடத்தில் இருக்கிறது. கடைசி மூன்று இடங்களில் அஸ்ஸாம் (49), ஜார்கண்ட் (48), பீகார் (45) மாநிலங்கள் உள்ளன. 

மேம்படுத்தப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியதில் இரண்டாவது இடத்தையும், எழுத்தறிவு, பாலின சமத்துவம், இணைய இணைப்பு, செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிப் பயன்பாடு உள்ளிட்ட கணக்கீட்டில் பத்தாவது இடத்தையும், குடும்பக்கட்டுப்பாடு, ஆண்-பெண் விகிதம், நிதி மற்றும் நீதி அமைப்புகளின் செயல்பாடு, கல்லூரிகளின்  எண்ணிக்கை உள்ளிட்ட கணக்கீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

மாநிலங்கள் வளர்ச்சிக் குறியீடு
கேரளா 68.09  
இமாசல் பிரதேசம் 65.39
தமிழ்நாடு 65.34 
உத்தரகண்ட்   64.23
கோவா 63.39
மிசோரம் 62.89
சிக்கிம் 62.78
பஞ்சாப்  62.18 
டெல்லி 60.17
கர்நாடகா 59.72

           
தமிழகத்தில் அடிப்படைத் தேவைகள் அதிகம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சர்வதேச அளவிலான முன்னேற்றத்துக்கு இணையாகப் பல பிரிவுகளில் முன்னேற்றம் கண்டுவருகிறது. தமிழ்நாடு, இந்தியாவில் உயர் சமூக முன்னேற்றமுள்ள மாநிலங்களில் ஒன்றாக மாறியிருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தவிர, தமிழ்நாடு மருத்துவம், கல்வி மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் சிறந்த முறையில் மேம்பட்டு வருவதாகவும், பொது வினியோகம், வளர்ச்சித் திட்டங்களைச் சிறந்த முறையில் செயல்படுத்துவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளது. 

சமூக வளர்ச்சி


அண்டை மாநிலமான கேரளா சமூக உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துவதால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவச் சேவைகள் பிரிவிலும் கேரளா முன்னணியில் இருக்கிறது. அதிக வருமானம் கொண்ட மாநிலங்களாக டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் இருக்கின்றன. இங்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சிறப்பாக இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முதியோருக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு கடைசி இடத்தில் இருக்கிறது என்பது வருத்தமான விஷயமே. தமிழ்நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களில் பெரும்பாலானவை முதியோர்கள் வசிக்கும் இடங்களில் நடந்துள்ளன. அதேபோல், வீடுகளில் தனித்து வசிக்கும் முதியோர்கள் படுகொலை செய்யப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து அனைத்துத் துறையிலும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!