டிசம்பர் விபரீதம் கண்டுகொள்ளப்படாமல் போனதா? குஜராத் தேர்தல் சமயத்தில் வெடிக்கும் அமித்ஷா சர்ச்சை!

ரம்புகளைச் சில்லிட வைக்கும் இப்படியான  ஒரு டிசம்பர் காலையில்தான் அந்த பயங்கர சம்பவம் நடந்தது. மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப்ரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா நாக்பூரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இடத்தில் மரணமடைந்துவிட்டதாக மும்பையில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி லோயாதான் , 2005ம் ஆண்டு சட்டத்துக்கு புறம்பான வகையில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்ட சொராபுதீன் ஷேக் வழக்கை  சிபிஐ நீதிமன்றத்தில் அந்த சமயம் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர் 2005ல்  குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா. 2014 டிசம்பரில் லோயா மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட சமயம் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக இருந்தார்.

அமித்ஷா

2014ம் வருடத்தில் நிகழ்ந்த மரணத்தைப் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும் என்கிறீர்களா?. அந்த மரணத்தைப் பற்றிய பரபரப்பான 
புலனாய்வுக் கட்டுரை ஒன்றை அண்மையில் ஆங்கில இதழான கேரவான் வெளியிட்டிருந்தது, அதில்.. “ லோயா இறந்த சில வருடகாலத்திற்கு அந்த குடும்பத்தினர் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் 2016ம் வருடம் லோயாவின் அக்கா மகள் எங்களைச் சந்தித்து லோயாவின் மரணம் தொடர்பான தனது சந்தேகங்களை வெளிப்படுத்தினார். அதையடுத்து நவம்பர் 2016 முதல் நவம்பர் 2017 காலகட்டம்வரை நாங்கள் லோயாவின் அக்கா, அப்பா உள்ளிட்ட பல்வேறு உறவினர்களைச் சந்தித்தோம். கூடவே அவரின் உடற்கூறாய்வை மேற்பார்வையிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அவரது உடற்கூறாய்வு அறிக்கை ஆகியவற்றை விசாரணை செய்தோம். இவற்றையெல்லாம் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போது நீதிபதி லோயா மரணத்தின் மீது எங்களுக்கு புதிரெனச் சில கேள்விகள் எழுகின்றன.

உதாரணத்திற்கு, லோயாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக் குழு அமைக்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கு எந்தவித பதிலையும் அரசு தரப்பு தரவில்லை. கூடவே அவர் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மும்பையில் இருந்த லோயாவின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு நேரடியாக அவர்கள் யாரிடமும் லோயாவின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. மேலும், லோயாவுக்கு மாராடைப்பு ஏற்பட்ட நிலையில் நாக்பூரில் அருகே இருந்த தாண்டே நகர மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த மருத்துவமனையில் மாரடைப்பு நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவத் தேவையான ஈ.சி.ஜி வசதி கூட இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. ஒரு முக்கிய நீதிபதியை, சிகிச்சைக்காக அவ்வளவு சிறிய மருத்துவமனையிலா அனுமதித்திருப்பார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.மேலும் நீதிபதி லோயா இறந்த சமயத்தில் அவர் விசாரித்துக் கொண்டிருந்த ஒரே வழக்கு சொராபுதீன் வழக்கு மட்டுமே, என்பதால் அவரது இறப்பின் மீது கூடுதலான சந்தேகம் எழுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “2014ம் வருடத்தின் மத்தியில்தான் சொராபுதீன் வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த வழக்கு விசாரிக்க நீதிபதி உத்பத் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முதல்நாள் தொடங்கி அமித்ஷா ஒருமுறை கூட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதற்கான விளக்கத்தை உத்பத் கேட்ட ஒவ்வொரு முறையும் அவர் மும்பைக்கு வரமுடியாத சூழலில் இருப்பதாகவே கூறப்பட்டது. இதற்கிடையே உத்பத் மாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு லோயா நியமிக்கப்பட்டார். அதிலுமே சட்டவிதிகள் மீறப்பட்டிருந்தது. காரணம், சொராபுதீன் வழக்கைப் பொறுத்தவரை ஒரே நீதிபதிதான் தொடக்கம் முதல் இறுதி வரை விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இடையிலேயே உத்பத் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு லோயா வந்தார்.

நீதிபதி லோயாலோயா, அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து அக்கறைகொள்ளவில்லை என்றாலும். தனது விசாரணையில் தீவிரமாக இருந்தார். இதனை உணர்ந்த மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மோஹித்ஷா தரப்பு நீதிபதி லோயாவிடம் பேரம் பேசியதாக லோயாவின் தந்தை ஹர்கிஷன் எங்களிடம் சொன்னார். கூடவே, டிசம்பர் 2014ன் மத்தியில் இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை இருக்கவிருந்த நிலையில்தான் லோயாவின் மரணமும் நிகழ்ந்தது..” என்பது போன்ற பலதரப்பட்ட விளக்கங்களை அந்த கட்டுரை முன்வைக்கிறது. இந்த புலனாய்வு பல பகுதிகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பி.ஜே.பியைச் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்காவே நீதிபதி இறப்பில் இருக்கும் மர்மம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.

ஆனால் இந்த கட்டுரை குறித்து விளக்கமளித்துள்ள பி.ஜே.பி தரப்போ, “புலனாய்வுக் கட்டுரை என்கிற பெயரில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பியூஷ் மனுஷ்கேரவான் இதழ் ஒரு கட்டுரையைப் பிரசுரித்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.

உச்சகட்டமாக இந்த கட்டுரை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துப் பேசிய சூழலியலாளர் பியூஷ் மானுஷ் மீது பி.ஜே.பி யுவ மோர்சாவைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்துள்ளார்கள். 

வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள பியூஷ், “ வழக்கு தொடர்பாக ஒருமுறை கூட அமித்ஷா  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததையே காரணம் காட்டி அவருக்கு அந்த வழக்கிலிருந்து விடுதலை கோரப்பட்ட அபத்தம் பற்றியும் அந்த இதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் சூழலியல் பிரச்னை தொடர்பாக என்மீதும் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. நானும் நீதிமன்றத்தில் அதுபோலவே விடுதலை கோரட்டுமா? விடுதலை கோரமுடியுமா? இந்த நாட்டில் நீதிமன்றம் என்பது எப்போதும் பெயரளவில்தான் இருக்கிறது. மேலும் முக்கியப் பிரச்னையான இதுபற்றி தேசிய ஊடகங்கள் ஏன் மௌனம் காத்து வருகின்றன என்றும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டு முடித்தார். 

குஜராத் தேர்தல் நெருங்கும் சூழலில் அமித்ஷா மீது மீண்டும் எழுப்பப்பட்டுள்ள இந்தப் புகார், அந்த மாநிலத்தின் தேர்தல் சூழலை பாதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!