வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (04/12/2017)

கடைசி தொடர்பு:09:25 (04/12/2017)

”வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது பா.ஜ.க” : ராகுல் குற்றச்சாட்டு

"குஜராத்தில், கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க, மக்களுக்கான எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி

ஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக, அந்த மாநில ஆளும் கட்சியான பி.ஜே.பி-யும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “குஜராத்தில் 22 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவரும் பா.ஜ.க, மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ.க தவறிவிட்டது. பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. குஜராத் மாநில சகோதரிகளுக்கு பா.ஜ.க வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளித்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.