வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (04/12/2017)

கடைசி தொடர்பு:10:59 (04/12/2017)

குஜராத், மகாராஷ்டிரா நோக்கி நகரும் ஒகி புயல்

கடந்த சில நாள்களாக தமிழகம் மற்றும் கேரளத்தைப் புரட்டிப்போட்ட ஒகி புயல், தற்போது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகரத் துவங்கியுள்ளது.

ஒகி புயல்

ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு, தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த ஒகி புயல் கேரளா நோக்கி நகர்ந்ததால், புயலால் கேரளா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.

இதையடுத்து, ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசை வலிறுத்தியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவின் சில பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். அந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தற்போது அரபிக் கடலில் மையம்கொண்டுள்ள ஒகி புயல் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பலத்த புயல் காற்று வீசும். இதனால், இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.