ரூ.1.40 கோடி சம்பளம் தரும் மைக்ரோசாஃப்ட்... கேம்பஸ் இன்டர்வியூவில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஜாக்பாட்! #IIT

ஐ.ஐ.டி(IIT)களில் கேம்பஸ் இன்டர்வியூ களைகட்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகச் சரிவைச் சந்தித்த ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு நேர்காணல், இந்த ஆண்டு எல்லோரின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 

IIT

கடந்த ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் முதல் நாள் வளாக நேர்காணலில் 27 நிறுவனங்கள் கலந்துகொண்டு 160 பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய நிலையில், இந்த ஆண்டு 195 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கடிதம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சர்வதேச நிறுவனங்களின் வருகை அதிகரித்திருப்பதும், சம்பளத்தை உயர்த்தி வழங்குவதும், அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்வதும் ஐ.ஐ.டி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி-யின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் ஆலோசகர் மனு சந்தானம் ``கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் தேர்வாகியிருப்பது நம்பிக்கை தருகிறது. இந்த ஆண்டு 280 நிறுவனங்கள் வளாகத்தேர்வில் கலந்துகொள்ள பதிவுசெய்திருக்கின்றன. முதல் நாளில் தேர்வானதுபோல் அடுத்தடுத்த நாள்களிலும் அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்யவே வாய்ப்புகள் அதிகம்" என்கிறார். 

ரூர்க்கி ஐ.ஐ.டி-யில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவின் முதல் நாளிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. மூவரில் இருவருக்கு அமெரிக்காவில் பணிவாய்ப்பையும், ஆண்டுச் சம்பளமாக 2,15,000 டாலர் சம்பளம் வழங்கவும் முன்வந்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் 1.39 கோடி ரூபாய். இதைத் தவிர, கவுகாத்தி ஐ.ஐ.டி-யில் எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுச் சம்பளமாக  38 லட்சம் ரூபாயை வழங்குவதாகத்  தெரிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட்.

IIT

கேம்பஸ் இன்டர்வியூவில் இ.எக்ஸ்.எல்., கோல்ட்மேன் சாக்ஸ், சம்சாங், ஆப்பிள், பாஸ்டன் கன்சல்டிங், டெக்ஸஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், ஐ.பி.எம்., யூபர், புரெக்டர், ஆல்வாரெஸ் & மார்சல், காம்பிள், டால்பர்க் அட்வைசர்ஸ் மற்றும் ஆக்டஸ் அட்வைசர்ஸ், ஐ.டி.சி., ஃபிளிப்கார்ட், ஆராக்கிள், குவால்காம் மற்றும் ஏர்பஸ் என ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூவில் மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன.

டவர் ரிசர்ச் நிறுவனம் 32 முதல் 42 லட்சம் ரூபாய், யுபர் இந்தியா நிறுவனம் 36 லட்சம் ரூபாய், ஸ்க்லம்பெர்கர் நிறுவனம் 31.5 லட்சம் ரூபாய், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 32.5 லட்சம் ரூபாய், ஐ.டி.சி நிறுவனம் 19.5 லட்சம் ரூபாய், சம்சாங் நிறுவனம் 96.8 லட்சம் ரூபாய், ஆராக்கிள் நிறுவனம் 23 லட்சம் ரூபாய், பிளாக்ஸ்டேன் முதலீட்டு வங்கி நிறுவனம் 35 முதல் 44 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்க தயாராக இருப்பதாகச் சொல்லி, மாணவர்களைத் தேர்ந்தெடுத்துவருகின்றன. யுபர் இந்தியாவின் தலைமை நிறுவனமான யுபர் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து மாணவர்களைத் தேர்வுசெய்துவருகிறது. 

Madras IIT

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தேர்வில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்காவில் பங்குச்சந்தை நிறுவனமான நாஸ்டாக் நிறுவனமும் கலந்துகொண்டு மாணவர்களைத் தேர்வுசெய்துவருகின்றன. ஆப்பிள் நிறுவனம், ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறது. 

இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பம், விற்பனை மேலாண்மை, ஆராய்ச்சி & மேம்பாடு, பொறியியல் ஆராய்ச்சி, நிதி ஆலோசனை நிறுவனங்கள், தகவல் பகுப்பாய்வு நிறுவனங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் புவி ஆய்வு நிறுவனங்கள் எனப்  பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்றிருக்கின்றன.  

பொதுத்துறை நிறுவனங்களான இஸ்ரோ, ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் ஐ.ஐ.டி மாணவர்களைப் போட்டிபோட்டுத் தேர்ந்தெடுக்கின்றன. கடந்த ஆண்டு ஐ.ஐ.டி கேம்பஸ் இன்டர்வியூவில் 25-க்கும் குறைவான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொண்டன. ஆனால், இந்த ஆண்டு ஐம்பதுக்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 

இந்த ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நள்ளிரவு நேரத்தில் நடத்தப்படும் `Graveyard Slot’ என்று அழைக்கப்படும் நேர்காணல் நிகழ்ச்சியை ரத்துசெய்திருக்கிறது. மேலும், நேர்முகத்தேர்வில் நிறுவனங்கள் எவ்வளவு சம்பளம் வழங்க முன்வருகின்றன என்ற தகவலையும் வெளியிடுவதில்லை என்று முடிவுசெய்திருக்கின்றனர்.

``ஐ.ஐ.டி-யில் கேம்பஸ் இன்டர்வியூயில் ஒருசில மாணவர்களுக்குக் கோடியில் சம்பளம் கிடைத்தாலும், மற்றவர்களுக்குச் சராசரியாக 10 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது'' என்கிறார்கள் பேராசிரியர்கள். 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ பெருமளவில் குறைந்துவிட்டன என்று சொல்லும் நிலையில், ஐ.ஐ.டி-யில் மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து தேர்வுசெய்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!