வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (05/12/2017)

கடைசி தொடர்பு:10:15 (05/12/2017)

மகாராஷ்டிராவை நோக்கி ஒகி புயல்: மும்பை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம், கேரளாவைப் பதம்பார்த்த ஒகி புயல், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி நகர்கிறது.

ஒகி

ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு, தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால், தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த ஒகி புயல் கேரளா நோக்கி நகர்ந்ததால், கேரளா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 'ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என்று கேரள அரசு மத்திய அரசை வலிறுத்தியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவின் சில பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும்.

இந்நிலையில், தற்போது அரபிக் கடலில் மையம்கொண்டுள்ள ஒகி புயல் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இதனால், மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ”அரபிக்கடலில் வடக்கு-வட மேற்குத் திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்வதால், புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நள்ளிரவில் கரையைக் கடக்கும். இதனால், இன்று இரவு தெற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.