”இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது நம்மை வெட்கப்பட வைத்துள்ளது” : மம்தா பானர்ஜி

”இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது நாட்டுக்கு நற்பெயரைப் பெற்றுத்தராது” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை வீரர்கள்

இந்தியா-இலங்கை மோதிய டெஸ்ட் போட்டி, இரண்டு நாள்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்றது. இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர்கள், சுவாசிக்க சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடியுடன் களத்தில் இறங்கி விளையாடினர். உணவு இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு காமாகே,  அசாதாரணமாக உணர்வதாக, அணியின் உடற்பயிற்சியாளரை அழைத்துப் பேசினார். இதனால், போட்டி 17 நிமிடங்கள் தடைபட்டது. அதேபோல, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மலும், தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறி மைதானத்தைவிட்டு வெளியேற, போட்டி தொடங்குவதில் 4 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியில்... நடுவர்கள், மருத்துவர் ஒருவருடன் ஆலோசனை நடத்தினர்.

ஒரு கட்டத்தில், இலங்கை அணி 10 வீரர்களுடன் களமிறங்கும் சூழல் ஏற்பட்டபோது, அந்த அணியின் உடற்பயிற்சியாளர் நிக் லீ, ஜெர்சியுடன் களமிறங்கத் தயாரானார். அதேபோல, இலங்கையின் ஃபீல்டிங் பயிற்சியாளர் மனோஜ் அபேவிக்ரமாவும் ஃபீல்டிங் செய்யத் தயாரானார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன் குவிக்க இந்திய அணி திட்டமிட்டிருந்தபோது, இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகவே டிக்ளேர் செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம்குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது எனக்கு வெட்க உணர்வைத் தருகிறது. டெல்லியில் உள்ள மாசு காரணமாக இலங்கை வீரர்கள் அதுபோல விளையாடி உள்ளனர். மாசு நிலையைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு உடனடியாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!