”2ஜி வழக்கில் நாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு!”- சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு

”2ஜி வழக்கில் நாட்டுக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைக்கும்” எனக் கணித்துள்ளார் பா.ஜ.க மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமி

எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு, இறுதிநிலைக்கு வந்திருக்கிறது. 2007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. இதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து, 2010 நவம்பரில், ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க, சி.பி.ஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஓ.பி.ஷைனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தி.மு.க எம்.பி., கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. இவர்கள்மீது மூன்று வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன. அதில், இரண்டை சி.பி.ஐ-யும், ஒன்றை அமலாக்கப் பிரிவும் தாக்கல்செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள்மீது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது.

இருதரப்பு சாட்சியமும் முடிந்த நிலையில், இறுதி வாதம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். இதுகுறித்து பா.ஜ.க மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், “2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; நாட்டுக்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!