பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினம்!

அம்பேத்கர்

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
– டாக்டர் அம்பேத்கர்.

‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதையும் தாண்டி, அம்பேத்கர் ஒரு மகத்தான ஆளுமை. மனித சமூகத்தின் மேம்பாடுகுறித்து சிந்திக்க தன் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர் அம்பேத்கர். அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது.

கல்வி, அரசியல் அதிகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காலம்காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். அம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அம்பேத்கர், 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள அவரது வீட்டில் தூக்கத்திலேயே உயிர் துறந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!